பாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்



பாடசாலைகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு பெற்றோரிடம் கோரப்படுகின்றமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெற்றோரை பலவந்தப்படுத்தி இதற்காக நிதி சேகரிக்கப்படுவதாகவும் இந்த விடயம் தொடர்பில் தாம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்பதுடன், இந்த குற்றச்செயலில் ஈடுபடும் நபர் அல்லது குழுக்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்கவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புத் தரப்பினர், அதிபர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இதனிடையே ஏற்படுத்தப்படுகின்ற வதந்திகள் தொடர்பில் கவலையடைவதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் செயற்படுவது அனைவரது பொறுப்பும் கடமையும் ஆகுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் 1988 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்க முடியுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.