முஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் விரும்பினால் இடமாற்றம் பெறலாம்

முஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் விரும்பினால் இடமாற்றம் பெறலாம். தமிழ் பகுதிகளிலிருந்து இடமாற்றப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளின் வெற்றிடத்திற்கே, அவர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்காலிக இடமாற்றத்தை பெற விரும்புபவர்கள் ஜூன் 28ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டுமென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார். 

தற்போது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடீர் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, ஆளுனரின் உத்தரவின்பேரில் இந்த ஆசிரியர் இடமாற்றம் நடைபெற்று வருகிறது. தமிழ் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப ஆர்வமுள்ள தமிழ் ஆசிரியர்கள்- குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றி வரும் தமிழ் ஆசிரியர்கள் விரும்பினால், அவர்கள் தற்காலிக இடமாற்றத்தை ஜூன் 28 ஆம் திகதி வரை பெறலாம்.

அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு தற்போது முஸ்லிம் பெண் ஆசிரியைகளிற்கே இடமாற்றம் வழங்கப்படுகிறது. முஸ்லிம் ஆண் ஆசிரியர்களிற்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை. எனினும், இருப்பிடத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சனை காரணமாக தவிர்க்க முடியாமல் ஓரிரு ஆண் முஸ்லிம் ஆசிரியர்களிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கிறது. வேறு எவருக்கும் வழங்கப்படவில்லை.

இதேவேளை, விண்ணப்பித்த சிற்றூழியர்கள் ஓரிருவருக்கு இடமாற்றமில்லாமல் அந்தந்த வலயக்கல்விப் பணிமனைக்கு இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தற்காலிக இடமாற்றம் பெற விரும்பும் தமிழ் ஆசிரியர்கள் அந்தந்த அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளரின் சிபாரிசுடன் மாகாண கல்விப் பணிமனைக்கு வந்தால் இடமாற்றம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்