வியாளேந்திரன் எம்.பி.யின் கோரிக்கையால் கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதியின் உத்தரவு!!


"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று சற்று முன்னர் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரவு மாலை 7 மணிக்கு ஆரம்பித்து 9.30 மணிக்கு நிறைவடைந்துள்ளது. 

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மகிந்த அமரவீர, விஜேதாஸ ராஜபக்ச, ச.வியாழேந்திரன், டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது சமகால அரசியல், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். 

இந்த சந்திப்பு குறித்து எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். 

குறிப்பாக, அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றம் குறித்து தான் முன்வைத்த கருத்திற்கு ஜனாதிபதி உடனடி தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தான் விடுத்த கோரிக்கையினை அடுத்து, மறுகணமே கிழக்கு ஆளுநருக்கு தனது செயலாளர் ஊடாக ஜனாதிபதி அந்த இடத்திலையே அழைப்பு எடுத்து பேசியதாகவும் அவர் கூறினார். இதன்படி, அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை உடனடியாக இரத்து செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாக ச.வியாழேந்திரன் எம்.பி. குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பதிலீடுகள் இன்றி கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்ஹா இடமாற்றம் வழங்கியிருந்தார். பாதுகாப்பு கருதி முஸ்லிம் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆளுநரின் இந்த நடவடிக்கையினால், தமிழ் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில், ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், ஜனாதிபதியுடன் இந்த அவசர சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.