வவுணதீவு பிரதேசத்தில் . இடி மின்னல், மினி சுறாவளியினால் 62 வீடுகள் சேதம் - நிவாரணம் வழங்க நடவடிக்கை



-கனகராசா சரவணன் --

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை (16.06.2019) ஏற்பட்ட பலத்த இடிமின்னல், மழையுடன் கூடிய சூறைக்காற்றினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு; பல மரங்கள் முறிந்து வீழ்ந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அனர்த்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


இவ் மினிச் சூறாவளி சம்பவதினமான ஞாயிற்றுக்கிழi மாலை சுமார் ஒரு அரை மணித்தியாலம் வீசிய காற்றினால் வவுணதீவு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள இலுப்படிச்சேனை, மண்டபத்தடி, கொத்தியாபுலை, தாண்டியடி, காஞ்சிரங்குடா, புதுமண்டபத்தடி உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறைக்காற்றினால் பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் மரங்கள் வீட்டின் மேல் முறிந்து வீழ்ந்ததனால் அங்கிருந்த சுமார் 62 வீடுகளுக்கு பகுதிச் சேதம் ஏற்பட்டுள்ளது


இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சியாத், மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பாளர் ஆர். சிவநாதன், மண்முனை மேற்கு பிரதேச செயலக அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் என்.சிவநிதி மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று திங்கட்கிழமை(17) பகல் சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.

இதன் போது சேதமடைந்த வீடுகளுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.