முஸ்லீம் சமூகமும் அடிப்படைவாதமும் ! இதுவரை இழந்தவை

ஆர்.சயனொளிபவன் & TEAM  
 • ஞானசார தேரர் விடுவிப்பு
 • முஸ்லீம் பெண்களின் உடையில் கட்டுப்பாடு
 • வரலாறு காணாத வகையில் அணைத்து முஸ்லீம் அமைச்சர்களும் மற்றும் ஆளுநர்களும் இராஜினாமா
 • நடுநிலையாளர்கள் என்ற தன்மையை இழந்த முஸ்லீம் சமூகம்
 • முஸ்லீம் மக்கள் பீதியில்
 • கைதுகள் சுற்றிவளைப்பு வீதி சோதனை… தொடரும் கெடுபிடிகள்
 • கேள்விக்குறியாகிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம்

இலங்கையை பொறுத்தவரையில் மீண்டும் ஒரு முறை பத்துவருட காலப்பகுதிக்குள் போர் கால சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட தன்மையை உணரக்கூடியதாக உள்ளதை ஒரு பக்கம் பார்க்க மறுபக்கத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று முஸ்லீம் அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து கடந்த 6 கிழமைகளில் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்திற்கும் ஏற்பட்ட பாதகமான விளைவுகளை பட்டியல் இட்டு பார்க்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டதையும். மேலும் இவ் வேளையில் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களை விட பௌத்த துறவிகளே நாடு எவ்வாறு செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கும் சதியாகவும் தென் படுவதையும் மீண்டும் ஒரு முறை உணரக்கூடியதாக உள்ளது

ஞானசார தேரர் விடுவிப்பு


ஞானசார தேரரை  பொறுத்த அளவில் அவர் ஒரு பௌத்த துறவிக்கு உரிய தன்மைகள் அற்ற ஒருவராகவும் மற்றும் மதரீதியான காரணங்களுடன் தொடர்பும் அற்ற ஒரு துறவியாகவும் விளங்குகின்றார் . மேலும் பௌத்த மதம் போதிக்கின்ற அமைதி சாந்தம் சாத்விக கொள்கைக்கு மாறாக வன்முறை கொள்கைகளில் அதீத நம்பிக்கை உடைய ஒருவர் என்றும் கருதப்படுகின்றார். அவருடைய சிங்கள அடிப்படைவாத கொள்கைகள் மற்றும் சிறுபான்மை இனமக்களுக்கு எதிரான வன்முறை கொள்கைகள் அவரை சிறுபான்மை மக்களின் மத்தியில் ஒரு துறவி என்பதை விட அவர் ஒரு சிங்கள கடும்போக்கு இனவாதியாகவே தென்படுத்துகின்றார் . ஞானதேரர் ஒரு வருடகாலத்துக்கு முன் நீதிமன்றத்தை அவமதித்த காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் பெரும்பாலானோருக்கு தெரிந்த ஒரு விடயமும் ஆகும் . மேலும் தேரரை சிறையில் அடைப்பதற்கு முன்பு முஸ்லீம் மக்களுக்கு எதிராக தமது அமைப்பான பொதுபல சேனையின் ஊடாக பரவலான வன்முறை நிகழ்வுகளை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டதாகவும் மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் மிக நெருங்கிய தொடர்புடனும் காணப்பட்ட ஒருவராகவும் . மற்றும் இவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையிலும் மற்றும் நாடு மிகவும் ஒரு நெருக்கடியான நிலையில் இருக்கின்ற இவ் வேளையிலும் இவர் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டுள்ளது சிறுபான்மை சமூகத்துக்குள் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது . சிறுபான்மை மக்களை பொறுத்த அளவில் அதிலும் மிக முக்கியமாக முஸ்லீம் சமூகம் அண்மைக்காலமாக இவரின் நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக காணப்படுகின்றது . மேலும் பல முஸ்லீம் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புக்களுக்கு இவருடைய அமைப்பு காரணமாக இருந்தது என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கவிடயமாகும் .


முஸ்லீம் பெண்களின் உடையில் ஏற்பட்ட கட்டுப்பாடு

எமது நாட்டை பொறுத்தளவில் முஸ்லீம் சமூகத்தை சேர்த்த பெண்கள் தமது மதத்தை அடையாளப்படுத்தக்கூடியவகையில் அணியும் உடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் அற்றநிலையே உயிர்த்த ஞாயிறு தினம் வரையும் காணப்பட்டது. ஆனால் அன்று நடத்தப்பட்ட முஸ்லீம் அடிப்படைவாதிகளின் தற்கொலை குண்டு தாக்குதலை தொடர்ந்து இவ்வாறான உடைகளை அணிந்து ஆண்களும் செல்லலாம் என்ற கரணம் பரவலாக எழுந்த காரணத்தை காட்டி இரவோடு இரவாக பர்தா  வகையான உடைகளை அணிந்து பொது இடங்களுக்கு  செல்வதற்காண கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது. மேலும் இதனை விட அரச காரியாலயங்களில் குறிப்பாக பெண்கள் குறிப்பிட்ட வகையான உடைகளை மட்டுமே அணியலாம் என்ற முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அறியக்கூடியதாக உள்ளது. முஸ்லிம்கள் வாழும் பல நாடுகளில் குறிப்பாக முஸ்லீம் அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதல்களின் பின் இவ்வாறான தடைகளை மேற்கொள்ளப்பட முற்பட்ட வேளைகளில் இவை தமது மத சார்பான உரிமை மற்றும் இவ்வாறன தடைக்கான முயற்சிகள் தமது அடிப்படை மனித உரிமையை மீறும் செயல் என கூறி சில நாடுகளில் குறிப்பாக பிரஞ்சு நாட்டில் நீதி மன்றம்வரை சென்று இப்படிப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தமுடியாத நிலையில் அவ் நாடுகள் உள்ள வேளையில் இலங்கையில் இச்சட்டம் துரித கதியில் அமுல் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

வரலாறு காணாத வகையில் அணைத்து முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் முஸ்லீம் ஆளுநர்கள் இராஜினாமாஇலங்கையின் வரலாற்றிலேயே கிழக்குமாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரின் ராஜினாமாவை தொடர்ந்து மேலும் அமைச்சர் றிசாட் பதியுதீனின் ராஜினாமை வேண்டி நின்ற நிலையில் கட்சிவேறுபாடின்றி அனைத்து முஸ்லீம் அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் அதிலும் முக்கியமாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளரும் மற்றும் அமைச்சருமான காபிர் காசிம் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்ததையும். அதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள பங்காளி கட்சிகளான முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுதந்திர கட்சியின் மிக மூத்த உறுப்பினரான   எம்.எச்.எம் பௌசி  மற்றும் சுதந்திர கட்சியின் பிரமுகரான பைசல் முஸ்தபா ஆகியோர் சூழவிருக்க முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவுவ்ஹக்கீம் ஊடகவியலாளர்களை அழைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதையும் காணக்கூடியதாக இருந்தது அதாவது முஸ்லீம் மக்கள் பீதியுடன் வாழும் தன்மையையும், அரசாங்கத்தின் கடமைப்பாட்டையும் வலியுறுத்தியதையும் தெளிவாக உணரக்கூடியதாகவும் இருந்தது.

 ஒரு தேரரின் உண்ணாவிரத போராட்டம் எவ்வாறு ஒரு சிறுபான்மை சமூகத்தின் எதிர்காலத்தை கேவிக்குறியாகியுள்ளது என்பதற்கு இந்நிகழ்வு நல்லதோரு உதாரணமாகவும் உள்ளது. இன்று முஸ்லீம் சமூகம் நாளை மற்றுமொரு சமூகம் என தொடரலாம் என்பதையும் இந்நிகழ்வு தெளிவாக தென்படுத்துகின்றது இலங்கையில் சிறுபான்மை சமூகம் எதனையும் கோரும் போது மேலும் ஒரு பவுத்த துறவி இவ்வாறான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு அம் முயற்சியை தோற்கடிக்கலாம் என்பதற்கு இவ்விடயம் சிறந்த உதாரணமாகவும் வருங்காலம்களிலும் அமையலாம் . தமிழ் சமூகத்தை பொறுத்த அளவில் அவர்களின் முயற்சிகள் காலத்திற்கு காலம் இவ் வகையான துறவிகளின் முயற்சிகளால் தோல்வி காண்பதையும் 1950களில் இருந்து காணக்கூடியதான ஒரு பொதுவான நிகழ்வாகவும் உள்ளதை நினைவுபடுத்துகின்றோம்


நடுநிலையாளர்கள் என்ற தன்மையை இழந்த முஸ்லீம் சமூகம் 


இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்திற்கும் பெருன்பான்மை சிங்கள சமூகத்திற்கும் இடையே 1957 இருந்து இன்றுவரைக்கும் 100% திருப்தியளிக்ககூடிவகையில் உறவுமுறை இருக்கவில்லை என்பதுதான் யதார்த்தம். அதிலும் குறிப்பாக 1983 இருந்து 2009 வரையிலான காலப்பகுதியில் பல சர்ந்தர்பங்களில் உறவுமுறை மிகவும் அடிமட்ட அளவிலேயே இருந்தது. அதே வேளை முஸ்லீம் சமூகம் சிங்கள தமிழ் இணங்களுக்கிடையில் நடுநிலையில் இருந்த ஒரு சமூகமாக தங்களை அடையப்படுத்திக்கொண்டு இருந்தார்கள் என்பதும் உண்மை மேலும் குறிப்பாக 2009 ஆண்டு போர் முடிவிற்கு வந்த தருணத்தில் இருந்தே சிங்கள சமூகத்தின் பார்வை முஸ்லீம் மக்களின் மேல் திரும்பத்தொடங்கியதையும் அன்றிலிருந்து சிறு சிறு வன்முறைகளில் ஆரம்பித்து அந்த பார்வை குறுகிய காலா இடைவெளிக்குள் அடுத்த கட்டத்திற்கு சென்றதையும் அதாவது ஞானதேரரின் பொது பல சேனை அமைப்பின் உருவாக்கமும் அதனை தொடர்ந்து முஸ்லீம் மக்களுக்கு எதிராக நாடளாவிய அளவில் மேற்கொண்ட வெறுப்பு நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகள் மேலும் உச்சகட்ட நிலையை அடைந்து ஒரு சந்தர்ப்பத்தில்  4 முஸ்லீம் அப்பாவிகள் உயிரை பறிக்கும் அளவிற்கும் சென்றதையும் குறிப்பிட்டு கூறலாம். இறுதியாக 2018 ஆம் ஆண்டு முஸ்லீம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கண்டி கலவரம் வரை குறிப்பிடலாம்.

ஆனால் மறுபக்கத்தில் பார்ப்போமாயின் இவை யாவும் ஒரு புறம் அரங்கேறிய சர்ந்தர்பத்திலும் முஸ்லீம் மக்கள் பொதுவாக தமது நாளாந்த வாழ்க்கையை பெருமளவு இன்னல்கள்களுக்கு மத்தியிலும் முன்னெடுத்து கொண்டு போகக்கூடிய நிலையும் காணப்பட்டது. ஆனால் உயிர்த ஞாயிறு அன்று முஸ்லீம் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து முஸ்லிம்கள் நடுநிலையாளர்கள் என்ற தன்மையை முற்றாக இழந்த நிலையே தற்போது அவர்களை சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் மூலம் தெளிவாக தென்படுத்துகின்றது. குறிப்பாக அணைத்து முஸ்லீம் அரசியல் வாதிகளின் இராஜிநாமாக்களும் அத்தனை தொடர்ந்து அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களும் மற்றும் முஸ்லீம் மக்கள் பீதியுடன் வாழுகின்ற நிலையும் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகின்றது. தற்போது சிங்கள மக்களை பொறுத்த அளவில் அவர்களின் எண்ணப்பாட்டில் முஸ்லீம் மக்கள் என்றால் ஒரு சந்தேகப்பார்வை எழுவதை தெளிவாக உணரக்கூடியதாகவும் உள்ளது. மேலும் உயிர்த ஞாயிறு குண்டுவெடிப்பை தொடர்ந்து முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறை தாக்குதல்களின் எண்ணிக்கையும் இதற்கு நல்லதொரு சட்டசியமாகவும் உள்ளது.

கைதுகள் சுற்றிவளைப்பு வீதி சோதனை… தொடரும் கெடுபிடிகள் 


உயிர்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு துறையினரின் பார்வை நாட்டின் பாதுகாப்பு நலன்கருதியும் நாட்டில் மேலுமொரு தாக்குதலுக்கு இடம் கொடுக்காத வகையிலும் சந்தேகத்திற்கு உரியவர்கள் அல்லது

 • முஸ்லீம் அடிப்படைவாதத்தோடு தொடர்பு உடையவர்கள் என்று கருதும் பட்சத்தில் கைதுகளை மேற்கொள்ளுவதும் அந்தவகையில் தற்போதுவரை - 2289 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதையும், இவர்களில் 1655 பேருக்கு பிணை வழங்கப்படும் 423 பேர் விளக்கமறியலிலும் 211 பேர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலிளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
 • முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் திடீர் மற்றும் திட்டமிட்டமுறையில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதும்
 • வீதிகளில் முஸ்லிம்கள் என்று தெரியும் பட்சத்தில் சோதனைகளை மேற்கொள்வதையும் மேலும் முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழும் இடம்களிலும் மற்றும் கேந்திர முக்கியதுவம் வாய்ந்த பகுதிகளிலும் வீதி தடைகளை அமைத்து சோதனைகளை மேற்கொள்ளுவதையும் .
மேலும் தமிழ் சமூகமும் இவ்வாறான இன்னல்களை 2009 ஆண்டு வரை எதிர்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். ஆனால் முஸ்லீம் சமூகத்தை பொறுத்த அளவில் இவ்வாறான நடைமுறைகளுக்கு எவ்வளவு கலப்பகுதியிற்கு முகம் கொடுக்க வேண்டும் என்பது ஒரு விடையில்லாத கேள்வியாகவே உள்ளது. அதாவது ISS பயங்கரவாதம் உலகிலே இருக்கும் வரை இலங்கையில் வாழும் முஸ்லீம் சமூகமும் இவ்வாறான இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை இருக்குமா என்ற கேள்வியும் தற்போது எழ ஆரம்பித்துள்ளது.


முஸ்லீம் மக்கள்  பீதியில் வாழும் நிலை


இலங்கையில் வாழுகின்ற 22 இலட்சம் முஸ்லீம் மக்களை பொறுத்தளவில் இவர்களில் அண்ணளவாக 7 இலட்சம் பேர் கிழக்கு மாகாணத்திலும் மேலும் 1 இலட்சம் பேர் வடமாகாணத்திழும் வாழ்கின்றனர். மிகுதியாக உள்ள 14 இலட்சம் முஸ்லீம் மக்களும்  சிங்கள பகுதிகளில் சிங்கள மக்களுக்கு இடையில் தொட்டம் தொட்டமாக வாழுவதை காணக்கூடியதாகவுள்ளது . அதிலும் கூடுதலான முஸ்லீம் மக்கள் சிங்கள பகுதிகளில் சில்லறை வியாபார நிலையம்களையும் உணவு விடுதிகளையும் நடத்துவதையும் அதேவேளை உயிர்த்த ஞாயிறு முஸ்லீம் அடிப்படைவாதிகளின் தற்கொலை தாக்குதலை தொடர்ந்து இப் பகுதிகளில் வாழும் முஸ்லீம் மக்கள் தாக்குதல்களுக்குள்ளாகுதல் முடிவில்லாத தொடர்சியாக காணப்படுவதாகவும் அவதானிகள் கூறுகின்றனர் மேலும் இதன் தோற்றப்பாட்டை முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவுவ்  ஹக்கீம் ஆற்றிய 03.06.19 உரையிலும் பல முறை உணரக்கூடியதாகவும் இருந்தது . மேலும் உயிர்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பல இடம்களில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை ஒரு சிறு பட்டியலிடலாம். இத்தன்மையானது குறிப்பாக சிங்கள மக்களிடையே வாழும் முஸ்லீம் மக்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும்

 • பொருளாதார ரீதியாக சிங்கள மக்கள் முஸ்லீம் வர்த்தக நிலையங்களை  பெருமளவில் தவிர்ப்பதனாலும் 
 • முஸ்லீம் மக்கள் தாங்கள் தாக்கப்படலாம் என்ற பீதியில் வீடுகளுக்குள் அல்லது தமது பகுதிகளில் முடங்கி இருக்க வேண்டிய நிலையில் இருப்பதையும்
இதனால் முஸ்லீம் மக்கள் பல இடம்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும். இதே வேளை தமிழ் மக்களும் உயிர்த்த ஞாயிறு அன்று தற்கொலை குண்டு தாக்குதலினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள முஸ்லீம் மக்கள் இப்படியான ஒரு பீதி நிலையில் வாழவும் இல்லை என்பதும் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இப்படிப்பட்ட வன்முறைகள் கட்டவிழ்த்து விட படவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கவோரு வரவேற்கத்தக்க விடயமும்மாகும் .

கேள்விக்குறியாகிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் 


உயிர்த்த ஞாயிறு முஸ்லீம் அடிப்படை வாத தாக்குதலிற்கு முன்பு சிங்கள மக்கள் மற்றும் அரசியல் வாதிகளால் இலங்கை தீவில் என்னவிடயம்களை சாதிக்கமுடியுமோ அதே போல் சில முஸ்லீம் அரசியல் வாதிகளாலும்
 எவற்றையும் சாதிக்கமுடியும் என்ற நிலைமையே நிலவியது. இவற்றுள் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நல்லதொரு உதாரணமாக இருந்தவர் என்று தான் கூறவேண்டும். அதற்கு உதாரணமாக அவருடைய மட்டக்களப்பு பல்கலைக்கழகமும் அமைந்துள்ளது. அதாவது ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு நிலைமையே நிலவியது. இவருடைய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் பாரிய அளவில் முஸ்லீம் மாணவர்களை மட்டும் உள்வாங்கக்கூடியவகையில் நிர்மாணிக்கப்பட்டபோதும் அதனை கேட்பார் யாருமே இல்லை மேலும் பௌதீகவளம் என்று பார்க்கும் போது இலங்கையில் நிறுவப்பட்ட பாரிய பல்கலைக்கழகமாக ஹிஸ்புல்லாஹ் அவர்களின் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அமையலாம். மேலும் இப் பாரிய பல்கலைக்கழகத்தின் தன்மைகளை பார்ப்போமாயின்


 • முதல் கட்டமாக அரசிடம் இருந்து 35 ஏக்கர் வரையிலான நிலப்பகுதி 30 வருட குத்தகையில் பெறப்பட்டது 
 • பின்னர் மேலும் ஒரு தொகுதி 45 ஏக்கர் நிலப்பரப்பு மற்றுமொரு 30 வருட குத்தகைக்கு பெறப்பட்டு மொத்தமாக 80 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய ஒரு பாரிய நிலப்பரப்பாக A5 நெடுஞசாலைக்கு ஒத்ததாக புனானை பகுதியில் மட்டக்களப்பு பொலநறுவை மாவட்ட எல்லை பகுதியை அண்மித்த பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பெறப்பட்டுள்ளது 
 • நிர்மாணத்திற்காக ஜனவரி 2019 வரை USD $26 மில்லியன்கள் வரை செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன 
 • இதுவரை கற்கை நெறிகளுக்காக 58 முஸ்லீம் மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது
ஆனால் தற்போதைய நிலைமைகளை பார்க்கும் போது இப் பல்கலைக்கழகம் பல சவால்களை எதிர் நோக்க வேண்டிய தன்மையே காணப்படுகின்றது. அதாவது

 • இவ்வாறான பாரிய அளவிலான மத போதனையை மையமாக கொண்டு நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் உரியமுறையில் தொடர்புடைய அணைத்து திணைக்களம்களினதும் அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா என்ற விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதையும்
 •  பெருமளவில் மாணவர்களை உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் இருந்து உள்வாங்க கூடிய வகையில் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போதைய சூழ்நிலையில் எதிர்பார்க்கப்படும் மாணவர்களின் தொகையை பெறமுடியுமா என்ற தோற்ற்றப்பாட்டையும் 
 • இதனை நிர்மாணிப்பதற்கான பாரிய அளவிலான நிதி எங்கு இருந்து பெறப்பட்டது போன்ற விபரம்களை கோரியும் 
 • நாட்டில் இன அமைதியை குழப்பக்கூடிய சார்ந்தர்ப்பங்கள் காணப்படுவதால் அரசமயமாக்குவதர்ப்பதற்குரிய சார்ந்தர்ப்பம்கள்
என பல கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளன இவை யாவற்றிட்கும் விடை காண்பதற்கு மிக நீண்ட காலம் தேவைப்படலாம். மேலும் இவை யாவற்றையும் வைத்து பார்க்கும் பொது ஹிஸ்புல்லாஹ் அவர்களின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் எதிர்காலம்மும் நீண்ட காலத்திற்கு கேள்விக்குறியாகவே அமையலாம் என்றும் கருதப்படுகின்றது


உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து இலங்கையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறுபட்ட அழுத்தங்கள் மற்றும் விரும்பத்தகாத விடயம்களை வைத்துப்பார்க்கும் போது முஸ்லீம் சமூகத்தை பொறுத்தளவில் இந்நிகழ்வுகள் அவர்களால் சற்றும் எதிர்பார்க்காத ஒரு அனுபவமாக கருதவேண்டும் . தமிழ் சமூகத்தை பொறுத்த அளவில் இவ்வாறான நெருக்கு வாரமான நிலைக்குள்ளான நிலையில் 30வருடகாலம் பயணித்தமையையும் குறிப்பாக போரின் பின்பு போர் வலயங்களில் இருந்தவர்கள் சகல சொத்துக்களையும் பெருமளவிலான உறவுகளையும் இழந்த நிலையில் உடுத்த உடையோடு மட்டும் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்தமையும் மற்றும் இவர்களில் தொகையான பெண்கள் வர்ணிக்கமுடியாத துன்பங்களை அனுபவித்ததையும் போர் முடிந்து 10 வருடங்கள் கழிந்தும் ஒரு நியாயம் கிடைக்காத நிலையும் தொடர்கின்ற இவ்வேளையில் இலங்கையில் உள்ள மற்றுமோர் சிறுபான்மை சமூகம் அவ்வாறான ஒரு நிலைக்கு செல்லகூடாதென்பதை கருத்தில் கொண்டும்


இலங்கை தீவை பொறுத்தளவில் மீண்டும் ஒரு முறை பௌத்த துறவிகள் தான் நாடு எவ்வாறு செல்லவேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் இவ்வேளையில் சிறுபான்மை சமூகமானது அது தமிழர்களாக இருந்தாலும் சரி முஸ்லிம்களாக இருந்தாலும் சரி மலையக தமிழர்களாக இருந்தாலும் சரி அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி பௌத்தவாத தன்மைகளுக்கு ஏற்றவாறு வாழக்கூடிய தன்மையை எம்முள்ளே உள் வாங்கி கொள்வதன் மூலம் ஒரு சிறிது காலம் ஆவது நிம்மதியாக வாழலாம் என்பதே நிஜம்  என்பதனை தென்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் ’ .


ஆர்.சயனொளிபவன் & TEAM