இலங்கை தயாரிப்பு ராவணா வன் செய்மதி விண் ஒழுக்கில்


இலங்கையினால் தயாரிக்கப்பட்ட ராவணா வன் செய்மதி விண் ஒழுக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு நேற்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு இடம்பெற்றுள்ளது.

செய்மதி விண் ஒழுக்கில் செலுத்தப்பட்டதை நேரடியாகக் காண்பதற்கு ஆதர் சி கிளார்க் மத்திய நிலையத்திற்கு அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ நேற்று சென்றார். ராவணா வன் என்ற செய்மதியை விண் ஒழுக்கில் நிலைப்படுத்தியமை இலங்கைக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகுமென அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ இதன் போது தெரிவித்தார்.

இந்த தயாரிப்புடன் தொடர்புடைய இரண்டு மாணவர்களினதும் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் விடயத்தில் இலங்கை 88வது இடத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆதர் சி கிளார்க் மத்திய நிலையத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளர் நாயகமுமான சனத் பனாவன்ன இது தொடர்பாக விபரித்தார். அமெரிக்க சர்வதேச செய்மதி நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட இந்த செய்மதி 400 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொள்ளும் .

1000 சென்றி மீற்றர் வரை சிறியதாக காணப்படும் இந்த செயற்கைக்கோள் 1.1 கிலோகிராம் நிறையை கொண்டுள்ளது. ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிந்து ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிகா என்ற மாணவியும் இணைந்து இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.