உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. கதிரேசு – குணசேகரம் அரச சேவையில் இருந்து ஓய்வு

 (சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தின் தமிழ் பாடத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய திரு.கதிரேசு – குணசேகரம் அவர்கள் அரச சேவையில் இருந்து இன்று ஓய்வு பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாத்தீவுக் கிராமத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியினை மட்/பட்/தேத்தாத்தீவு மகாவித்தியாலயத்தில் பயின்றார். இரண்டாம் நிலைக் கல்வியினை பட்டிருப்புத் தொகுதியின் பிரபல பாடசாலையான மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலத்திலும், உயர்தரக் கல்வியினை மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்திலும் பயின்று அங்கிருந்து போராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்காக தெரிவு செய்யப்பட்டார். தமிழ் மொழியில் இயல்பாகவே ஆர்வம் கொண்ட இவர் தனது பட்டப் படிப்பில் தமிழ் பாடத்தினைத் தெரிவு செய்து தமிழ் மொழியில் புலமை பெற்றார்.
பட்டப் படிப்பினை பூர்த்தி செய்து கொண்ட இவர் 1988 ஆம் ஆண்டு ஆசிரியப் பணியில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுக் கொண்ட இவர் மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலத்தில் கடமையினைப் பொறுப்பேற்று தன்னிடம் ஒப்படைத்த மாணவர்களின் இயல்பு நிலைகளை அறிந்து அம்மாணவர்களின் உயர்விற்காக உழைத்தார். பின்னர்  மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயம், மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயம், மட்/பட்/குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயம், மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கடமையாற்றினார். இந்த  வேளையில் 2008 இல் தமிழ்ப் பாடத்திற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக  பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு நியமிக்கப்பட்டு பின்னர் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ்ப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக ஓய்வு பெறும்வரை கடமையே கண்ணியமாகக் கருதி சேவை செய்து வந்தார்.
தமிழ் பாடத்தில் புலமை பெற்றிருந்ததன் காரணமாக மாணவர்களிடத்தில் தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துக் காட்டியதுடன் க.பொ.த. (சா/த) பரீட்சை, க.பொ.த.(உ/த) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தெளிவான விளக்கத்துடன் விடயங்களை கற்றுக் கொடுத்து மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற வழிவகுத்தார். அத்துடன் விளையாட்டுத் துறையில் சிறந்ததொரு வீரராக திகழ்ந்த இவர் 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கோட்ட மட்ட, வலய மட்ட, மாவட்ட மட்ட, மாகாண மட்ட தமிழ் மொழித் தின நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு மிகுந்த ஒத்துழைப்பினை வழங்கியிருந்தார். சிறந்த பேச்சாளனான க.குணசேகரம் அவர்கள் பாடசாலை விழாக்கள், ஆலயங்கள், பொது விழாக்கள் என்பவற்றில் தனது பேச்சு வல்லமையை வெளிப்படுத்தி நின்றார். அத்துடன் நூலாசிரியராகவும் பணியினை மேற் கொண்ட இவர் நவராத்திரி பாடல்களையும், தமிழ் மொழியும் இலக்கியமும் எனும் பாடத்திற்கான வினாத் தொகுப்பினையும் வெளியிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் சிறந்த பாராட்டினையும் பெற்றுக் கொண்டார்.