கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் விஞ்ஞான பாட கருத்தரங்கும் பாராட்டு நிகழ்வும்



மட்டக்களப்பு கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (23.06.2019) மட்/ விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விஞ்ஞான பாடக் கருத்தரங்கும், செல்வன் பத்மநாதன் சஜிமிதன் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
பிரதேச மாணவர்களின் விஞ்ஞான பாட அடைவுமட்டத்தை அதிகரிக்கும் முகமாக ஒன்றியத்தின் செயற்திட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் பங்கு கொண்டனர்.

ஒன்றியத்தின் கல்விக் குழுத் தலைவரும் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபருமான திருமதி திலகவதி ஹரிதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு மாநகர முதல்வர் கௌரவ தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இவருடன் பெண்கள் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஒன்றியத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட Brain Camp எனும் பாசறையில் பங்கு கொண்ட சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் செல்வன் பத்மநாதன் சஜிமிதன் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி பாசறையில் 16 நாடுகளைச் சேர்ந்த தெரிவுசெய்யபட்ட மாணவர்கள் பங்குபற்றினர். இலங்கையில் இருந்து பாசறைக்குத் தெரிவு செய்யப்பட்ட நால்வரில் செல்வன் பத்மநாதன் சஜிமிதன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ள அங்கீகாரம் பெற்ற 27 விஞ்ஞானிகளில் எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் காணப்படுகிறார். இதேபோல் இன்றைய இந்த மாணவனின் திறமையினையிட்டு நாம் பெருமையடையலாம். இவ்வாறு திறமையான பலர் நம்மிடையே காணப்படுகின்றார்கள். இவர்கள் திறனை வெளிக்கொணர வாய்ப்புகள் வழங்கவேண்டும். இதனை மாநகர சபை திட்டமிட்டு செயற்படுத்த உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் பல திறமைசாலிகள் வெளிக்கொணரப்படுவார்கள் என நம்புகிறேன்.

செல்வன் பத்மநாதன் சஜிமிதன் அவர்களை கல்லடிச் சமூகம் பாராட்டிக் கௌரவிப்பது மிகச்சிறப்பு. தற்போதய சூழ்நிலையில் மாணவர்கள் காலத்திற்குப் பொருத்தமான கல்வியைக் கற்க வேண்டும். இதன் மூலமே தமது எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள முடியும். தனியார் கல்வி நிலையங்கள்  வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படாமல் மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமென கௌரவ மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தனது உரையில் குறிப்பிட்டார்.

கனடாவில் வதியும் எமது பிரதேசத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் அவர்களின் புதல்வர்களான விமலநாதன் , சந்திரசேகரம், ஈசன் ஆகியோர் தாமாகவே முன்வந்து பாடசாலைக்கு உதவுவதை பாடசாலை அதிபர்  நன்றியுடன் நினைவுகூர்ந்தார். பாடசாலையுடன் சமூகம் ஒன்றிணைந்து பயணிப்பது மிக ஆரோக்கியமாகவும், உதவியாகவும் உள்ளதாக விவேகானந்தா பெண்கள் பாடசாலை அதிபர் திருமதி ஆர். பிரபாஹரி மேலும் குறிப்பிட்டார்.