சலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்!


அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கடந்த வாரம் ஜனாதிபதியினால் அமைச்சரவை ஒத்திவைக்கப்பட்டது என்ற பரவலான கருத்து நிலவிவருகின்ற நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடியது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டதோடு, இந்தக் கூட்டம் சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது.

இதன்போது சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமையாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதைப்போல, அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பாகவே ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

விசேடமாக எந்தவொரு விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவில்லை என்றும் அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பில் உரிய அமைச்சர்களினால் விளக்கங்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர்களான லகி ஜயவர்த்தன, அனோமா கமகே மற்றும் காமினி ஜயவிக்ரம ஆகியோரும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமாக எதுவும் கலந்துரையாடப்படவில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.