ஆசிரிய சேவைப்பிரமாண குறிப்பினை கருத்தில் கொள்ளாது, ஆசிரியர் ஆலோசகர் வெற்றிடத்திற்கு விண்ணப்பம் கோரல் இலங்கை ஆசிரியர் சங்கம்






கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பம் இலங்கை ஆசிரிய சேவைப்பிரமாணக் குறிப்பு (முதலாவது திருத்தம்) தொடர்பாக கவனத்தில் கொள்ளாததினால் கிழக்கு மாகாணத்திலுள்ள பெருமளவான ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரினால் சகல வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் விண்ணப்பதாரிகள் இலங்கை ஆசிரியர் சேவையில் தரம் 1, தரம் 2-1 ஐச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2019-04-22 திகதியிடப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவைப்பிரமாணக் குறிப்பு (முதலாவது திருத்தம்) 2120/2ம் இலக்க வர்த்தமான பத்திரிகையின் பிரகாரம் ஆசிரியர்களின் 2-11 இல் பதவியுயர்வு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான கல்வி வலயங்கள் இப்பதவியுயர்வுக்கான முறையான கடிதங்களை இது வரை வழங்கவில்லை இதனால் தரம் 2-11 தரம் 2-1 இல் பதவியுயர்வு பெரவேண்டிய பெரும்பாலான ஆசிரியர்கள் விண்ணப்பிப்பதற்கு தகுதியற்றவர்களாக இருப்பதோடு அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 
மேலும் கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 16/2018 இலக்க சுற்றறிக்கையின் படி விஞ்ஞான விடைய ஆசிரிய ஆலோசகர்கள் விஞ்ஞான துறை சார்ந்த பட்டதாரியாக இருத்தல் வேண்டும். தேசிய கல்விக் கல்லூரிகளில் விஞ்ஞான, கணித பட்டங்கள் வழங்குவதற்குரிய தேசிய கொள்கை வகுக்கப்பட்ட நிலையில், பாடவிதான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிரிய ஆலோசகர்கள் பாடத்துறையில் நிபுணர்த்துவம் கொண்டவர்களாக இருத்தலை கிழக்கு மாகாண கல்வியமைச்சு உறுதிப்படுத்தல் வேண்டும். என செய்திக்குரிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.
கல்விச் சேவை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் தரமான கல்வியினை மாணவர்களுக்கு வழங்குவதற்கும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் மற்றும் கல்வியமைச்சு தவறிவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.