சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச Brain Camp செயலமர்வில் கலந்துகொள்ளும் மட்/சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் பத்மநாதன் சஜிமிதன்

(Ravindramoorthy)
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் சர்வதேச Brain Camp செயலமர்வு ஜூன் 09 தொடக்கம் ஜூன் 15 வரை நடைபெற்று வருகின்றது.

இச் செயலமர்வுக்கு கல்வி அமைச்சினால் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஆற்றல் கொண்ட மாணவர்களில் இருந்து மாவட்ட, மாகாண ரீதியில் தெரிவுகள் இடம்பெற்று இறுதியில் அகில இலங்கை ரீதியில் 4 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த செயலமர்வில் பங்குபற்றி வருகின்றனர். இவர்களில் மட்/சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் பத்மநாதன் சஜிமிதனும் ஒருவராவார்.

2018 ஆம் ஆண்டு தேசிய விஞ்ஞான மன்றத்தால் நடாத்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல் 20 சிறந்த ஆராய்ச்சிகளில் ஒன்றாக இவரது ஆராய்ச்சியும் தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாராய்ச்சிக்கான வழிப்படுத்தலை மட்/சிவானந்தா தேசிய பாடசாலையின் ஆசிரிகைகளான திருமதி.கஸ்தூரி விவேகானந்தன், திருமதி.ராகினி மனோகரன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் எம்.சுகிர்தரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

இம் மாணவன் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் 9A தரச் சித்தியைப் பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.