தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆயுதப்பிரிவு தலைவரை அழைத்துவர சி.ஐ.டியினர் சவுதி சென்றுள்ளனர்.



தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆயுதப்பிரிவு தலைவர் மொஹமட் மிலான் என்ற அபு செய்லானை அழைத்துவருவதற்காக சி.ஐ.டியினர் சவுதி சென்றுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியவர் அவரென சொல்லப்படுகிறது.
இந்ததாக்குதல் இடம்பெற்ற வேளையில் மக்கா சென்றிருந்த அவர், ஏப்ரல் மாதம் 30ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்கொலை தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தார்.

எனினும் அவர் தொடர்பில் சவுதி மற்றும் சர்வதேச பொலிசாருக்கு எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சவுதி விமான நிலையத்திற்கு வந்தபோதும், இலங்கைக்கான விமானத்தில் ஏறவில்லை.

பின்னர் அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைதான தினம் மாலையே அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார் என்று சவுதி அரேபிய அதிகாரிகள் அறிவித்திருந்த போதும், அவர் நாடுகடத்தப்பட்டிருக்கவில்லை.

பின்னர் இலங்கையில் இருந்து விசேட குழு ஒன்று அங்கு சென்று அவரை அழைத்துவர முயற்சித்த போதும், வெறுங்கையுடன் திரும்பினர்.

பின்னர் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை அடுத்து கடந்த 11ம் திகதி செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அவரை இலங்கைக்கு அனுப்ப சவுதி சம்மதித்துள்ளது.

இதன்படி அவரை அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவின் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.

மொஹமட் மிலான் என்பவர், வவுணத்தீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் உள்ளவர் என்பதோடு, வண்ணாத்திவில்லுவில் சஹ்ரானின் பயிற்சி முகாமை காட்டிக் கொடுத்த அமைச்சர் கபீர் ஹசீமின் இணைப்பாளர் மொஹமட் நஸ்லின் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தியவர் என்று தெரிவிக்கப்படுகிறது.