கல்முனை வடக்கு செயலகத்திற்கு எதிராக 2ஆவது நாளாக தொடரும் சத்தியாக்கிரகம்; ஹரீஸ், ஜெமீல் பங்கேற்பு



(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனையில் இனத்துவ மற்றும் நிலத்தொடர்பற்ற ரீதியில் உருவாக்க எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி இன்று வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நாளாக அங்கு முஸ்லிம் தரப்பினரால் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்று (21) ஐந்தாவது நாளாகவும் அப்பிரதேச செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் முஸ்லிம்களின் சத்தியாக்கிரகப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பிரதேசங்களினதும் ஊர் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் இளைஞர்கள், வர்த்தகர்கள் உட்பட பெரும் திரளான பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நண்பகல் வேளையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் உள்ளிட்டோரும் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அதேவேளை இதற்கு ஆதரவு தெரிவித்து சாய்ந்தமருது- மாளிகைக்காடு இளைஞர் தலைமைத்துவ பேரவையின் ஏற்பாட்டில் அப்பிரதேச இளைஞர்களும் பேரணியாக வந்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கல்முனை நகரின் இரு முனைகளிலும் இடம்பெறுகின்ற போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது. நகரின் பல இடங்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.