தமிழருடனான நல்லெண்ண வாய்ப்புகளை புறந்தள்ளாதீர்கள்;முஸ்லிம் மக்களுக்கு மனோ அறைகூவல்



எப்போதுமே தமிழர் தரப்பில் இருந்துதான், நல்லெண்ணம் பிறக்க வேண்டும் என்றும், நாம் ஒரு அங்குலமும் அசைந்து கொடுக்க மாட்டோம் என்றும் கூறுவதன் மூலம் முஸ்லிம்கள் இரண்டு தவறுகளை செய்கிறார்கள். ஒன்று,கிழக்கு மாகாணத்தில் தமிழருடனான நல்லெண்ண வாய்ப்புகளை புறந்தள்ளுகிறார்கள். இரண்டு, தமிழர்களை வேறு வழியில்லாமல் முஸ்லிம் எதிர்ப்பு பேரினவாதிகளுடன் கூட்டு சேர நிர்பந்திக்கிறார்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கல்முனைக்கு  அமைச்சர் தயா கமகே,பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் விஜயம் செய்து கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரை சந்தித்த அதேவேளை,அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்;

அன்று, கடந்த கிழக்கு மாகாணசபையின் ஆட்சியமைக்கப்பட்ட போது,கிழக்கு மாகாணத்து தமிழர்களின் வாக்குகளின் மூலம் பதினொரு உறுப்பினர்களை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆக ஏழு உறுப்பினர்களை பெற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பலமிக்க முதலமைச்சர் பதவியை வழங்கி, கூட்டாட்சிக்கு உடன்பட்டு, தமது தமிழ்-முஸ்லிம் ஐக்கிய நல்லெண்ண சிந்தனையை வெளிப்படுத்தியது.

தமிழர் தரப்பில் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட அந்த தமிழ்-முஸ்லிம் கூட்டாட்சி தொடர்பில் மிகுந்த அதிருப்தி இருந்தாலும், நடைபெற்ற அந்த கூட்டாட்சி, தமிழர் நலன்களை புறந்தள்ளி வைத்து நடத்தப்பட்டதன் மூலம் அந்த அதிருப்தி மேலும் வலுப்பட்டிருந்தாலும், கடைசிவரை அந்த கூட்டாட்சி, முஸ்லிம் முதலமைச்சருடன் நடைபெற தமிழர் தரப்பு நல்லெண்ண சிந்தனையில் இடம் கொடுத்தது.

இன்று, இதற்கு பிரதியுபகாரமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் அம்பாறை வாழ் தமிழர்களின் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு தமது நல்லெண்ண சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஏனைய முஸ்லிம் தலைமைகளுக்கும் இப்போது கிடைத்துள்ளது.

எப்போதுமே தமிழர் தரப்பில் இருந்துதான், நல்லெண்ணம் பிறக்க வேண்டும் என்றும், நாம் ஒரு அங்குலமும் அசைந்து கொடுக்க மாட்டோம் என்றும் கூறுவதன் மூலம் முஸ்லிம்கள் இரண்டு தவறுகளை செய்கிறார்கள். ஒன்று,கிழக்கு மாகாணத்தில் தமிழருடனான நல்லெண்ண வாய்ப்புகளை புறந்தள்ளுகிறார்கள். இரண்டு, தமிழர்களை வேறு வழியில்லாமல் முஸ்லிம் எதிர்ப்பு பேரினவாதிகளுடன் கூட்டு சேர நிர்பந்திக்கிறார்கள்.

கல்முனை வடக்கு தமிழரது கோரிக்கை, புதிய ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, இன்று இருக்கும் உப-பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த வேண்டும் என்பதாகும். இந்த அடிப்படை உண்மைகளை மறைக்கவும், மறுக்கவும் முயல்வது அரசியல் மோசடி பாசாங்குதனமாகும்.

இனரீதியாக பிரதேச செயலகங்களை அமைக்க கூடாது என்றும்,நிலத்தொடர்பற்ற செயலகங்களை அமைக்க கூடாது என்று கூறி தமிழர்களின் கோரிக்கையை முடக்க நினைப்பதும் நியாயமான நடவடிக்கைகள் அல்ல. இனரீதியாக, நிலத்தொடர்பற்ற பிரதேச செயலகங்கள், கல்வி வலயங்கள் என நாடெங்கிலும் பல அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழர்களை மாத்திரம் பார்த்து இப்படியான நிபந்தனைகளை போடுவது சரியல்ல என்பதை நான் தெளிவாக கூறிவைக்க விரும்புகிறேன்.

இந்த கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படும் வேளையில் அங்கே எல்லை நிர்ணயிப்பு விடயத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் அவை, கால அட்டவணையுடன் கூடிய பேச்சுவார்க்தை மூலம் தீர்க்கப்படலாம். ஆனால்,அதற்கு முன் கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொள்கைரீதியாக ஏற்றுக்கொண்டு முஸ்லிம் தரப்பினர் தேசிய ஒருமைப்பாட்டுக்கும், கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் நல்லிணக்கத்துக்கும் வலு சேர்க்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றுள்ளது. இந்த பேச்சில் நான் தவிர்க்கமுடியா த காரணத்தால் கலந்துகொள்ளவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இரு தரப்பும் பிரச்சினை ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என உறுதி கூறியுள்ளனர். இந்த உறுதியை சம்பந்தப்பட்டவர்கள் மூலமாக அறிவிக்கவே மாவட்ட யூஎன்பி அமைச்சர் தயா கமகேவையும், கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் எம்பியையும் அழைத்துக்கொண்டு நான் அம்பாறைக்கு, உண்ணாவிரதிகளை சந்திக்க வந்துள்ளேன்.