முஸ்லிம் சமூகத்தினர் மீது மேற்கொண்ட வெறியாட்டங்களுக்கு நீதி வேண்டும்; ரவூப் ஹக்கீம்




உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை, இந்தத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் மீது காடையர்கள் மேற்கொண்ட வெறியாட்டங்களுக்கும் நீதி வேண்டும். இல்லையேல், வீதியில் இறங்கி முஸ்லிம் மக்கள் போராடுவார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் மக்கள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் என ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினர் மீதும் இனவாதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இனக்கலவரங்களைத் தூண்டும் வகையில் அவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நீதியான விசாரணைக்கு ஒத்துழைத்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவிகளைத் துறந்துள்ளனர்.

எனவே, விசாரணையின் பின்னர் உண்மைகளை அரசு வெளியிட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தினரைக் குறிவைத்து புத்தளம், குருணாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மீது காடையர்கள் மேற்கொண்ட வெறியாட்டங்களுக்கும் நீதி வேண்டும். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல், வீதியில் இறங்கி முஸ்லிம் மக்கள் போராடுவார்கள் என்றார்.