ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க இரு விசேட குழுக்கள் நியமனம்



முன்னாள் ஆளுநர்கள் M.L.A.M. ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளை உள்ளடக்கிய இரு குழுக்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளன.

M.L.A.M. ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகிய முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டோருக்கு எதிராக 27 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து சாட்சிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

M.L.A.M. ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகிய முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மூவரடங்கிய குழுவொன்று கடந்த 4ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.