பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலய வருடாந்த தேரோட்டம்




(ரவிப்ரியா)

பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆல வருடாந்த மஹோற்சவத்தின் முக்கியநிகழ்வான தேரோட்டம் புதனன்று (17) காலை ஆலய தலைவர் ம.கிருமைராஜா தலைமையில் நடைபெற்றது. ஆலய பிரதமகுரு பிரம்மஸ்ரீ மா.குலேந்திரரூபசர்மா ஆரம்ப கிரியைகளை மேற்கொள்ள. சுவாமி உள்வீதி வலம் வந்து ஆலயத்திற்கு வெளியே தேர் கூடத்திற்கு வருகை வந்து அழகிய தேரில் அற்புத அழகு மேலிட அமர்ந்து கொண்டார்.

வேலும் முருகப் பெருமானும் தக தகவென்று கதிரவன் ஒளியோடு போட்டி போட்டுஒளிவீச வடம் பிடித்திழுக்க பக்தர்கள் முண்டியடிக்க மேள வாத்தியங்கள் முழுங்கஅரோஹரா கோஷம் வானோடு முட்டி மோத மணியோசை கேட்டு வடம் இழுக்கபக்தர்களுக்கு அருள் பாலித்தபடியே சிவசுப்பிரமணியர் ஆலய வெளிவீதியில்வலம் வந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த அரிய தரிசனம்தங்களின் பிறவிப் பயனென மெய்யடியார்கள் மெய் மறந்து வணங்கி அகமகிழ்ந்தார்கள்.

இவ்வாலயத்தின் வரலாறும் அவ்வாறே பக்தர்களை பரவசப்படுத்தவே செய்யும்.ஒடையும் கடலும் அடுத்தடுத்து இருக்க விருட்சங்கள் சூழ இருந்து குளிர்மை ஊட்டமங்கலமான மஞ்சள் நிறத்தில் அடக்கமாக தன்னை அடையாளப்படுத்துகின்றது ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம். 

தொன்மை வாய்ந்த பெரியகல்லாற்றில் தொன்று தொட்டு ஆனைமுகனும். ஆழியம்மையும் ஆதி தெய்வங்களாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றன. அலை கடலின் அரவணைப்பும் மட்டு வாவியின் தழுவலும் இக்கிராமத்தின் இயற்கை வனப்பை மெருகூட்டுகின்றன.

இந்த வனப்பு மக்களை மட்டுமல்ல தெய்வங்களையும் தேடி வரவும்வசீகரிக்கவுவே செய்துள்ளது என்பது இக் கிராமத்தின் சிறப்பம்சமாகும். வரலாறுகள் அதற்கு சான்று பகிர்கின்றன.

இங்கு அமையப்பெற்ற பிள்ளையார் கடலம்மன் காளி ஆகிய முக்கிய தெய்வங்கள்சுய விருப்புடன் அடையாளப்படுத்திய இடங்களிலேயே ஆதியில் அந்தந்த ஆலயங்கள் அமையப்பெற்ற வரலாறு உள்ளது.

ஆந்த சிறப்பம்சம் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கும் இருக்கின்றது. கிராமத்தில் முருகன் அலயத்தினதும் அவசியம் கருதி விஸ்வகுல மக்களால்உருவாக்கப்ட்டதுதான் இவ்வாலயம். எட்டு தசாப்தங்களைக் கடந்தும் ஆறுமுகனின் அருள் நிறைந்த பிரதேசமாகவே இக் கிராமம் திகழ்கின்றது.இவ்வாலயத்தின் வரலாறும் தனித்துவமானது.

ஆலயம் அமைந்துள்ள இடம் முன்னர் ஆல், அரச, வேம்பு மற்றும் விருட்சங்கள்நிறைந்திருந்த ஆற்றை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதி அது கதிர்காம உற்சவகாலம் கதிர்காம தீர்த்தோற்சவம் நிறைவடைந்த நாள் அன்று பௌர்ணமி புல்போல் நிலவு எங்கும் ஒளி பரந்திருந்தது.

வழக்கம்போல் பிரதேச மக்கள் குடும்பம் குடும்பமாக தங்கள் வீட்டு முற்றங்களில் இருந்து நிலவை ரசித்துக் கொண்டிருந்தார்கள். அந்தகாலத்தில் கிராமத்திற்குமின்சார இணைப்பு இருக்கவில்லை. எனவே வான்வெளி நிலவை அண்ணாந்து பார்த்து மகிழ்வது வழக்கம்.

அப்போதான் அந்த அற்புதம் நடைபெற்றது. வானில் நிலவையே மிஞ்சும் வர்ண ஒளி வெள்ளம் மெதுவாக அசைந்து வந்து மயிலின் தோகை போல பிரகாசமான வர்ணஜாலம் காட்டி மெல்ல மெல்ல ஆலயம் தற்போது அமைந்துள்ள காட்டுப் பகுதியில் இறங்கியது.

எல்லோரும் கதிர்காமத் தீர்த்தம் முடித்து கந்த பெருமான் கல்லாற்றில் காலடி பதித்தவிட்டார் என ஆனந்தம் மேலிட அரோஹரா கோஷம் எழுப்பினர். அந்த இடத்தை மையமாக வைத்து ஆரம்பத்தில் பந்தல் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டு வழிபாடு ஆரம்பமானது.

இந்த பந்தல் ஆலயம் அமைத்து குறுகிய காலத்தில் அடுத்த பௌர்ணமி தினத்தில் அங்கு திடீரென வயோதிபர் ஒருவர் வருகை தந்தார். காவி உடை கழுத்தில் உருத்திராட்சம் ஒரு கையில் வேல் மறுகையில் மயிம் இறகு நெற்றி நிறையவிபூதி அமைதியான அழகிய முகம் புன்னகையின் புகலிடம் அவர் உடலிலிருந்து அபூர்வ வாசனை.

அவரைச் சூழ்ந்த மக்களுக்கும் தீர்த்தம், விபூதி கற்கண்டு வழங்கினார்.  அவற்றிலும் அபூர்வ வாசம் வீசியது. இந்த அற்புதங்களைச் செய்த அவர் மீண்டும் நான் இங்கு நிரந்தரமாக குடிகொள்ள வருவேன் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார்.

மற்றுமொரு அற்புதத்தைச் சந்தித்த மக்களுக்கு தொடர்ந்து மற்றுமொரு அற்புதம் காத்திருந்தது. அப்பகுதியில் இருந்த நாவல் மரத்தில் நாவல் பழம் பறிக்க ஏறிய சிறுவர்கள், அருகில் இருந்த வேம்பு மரத்தில் இருந்த வேல் ஒன்று பாய்ந்திருப்பதையும் அதிலிருந்து குங்கும நிறத்தில் சொட்டுச் சொட்டாக திரவம் கசிந்து கொண்டிருப்பதையும் கண்டு ஓடிவந்து மக்களுக்குத் தெரியப்படுத்தினர்.

அங்கு சென்ற மக்கள் வேலைப்பார்த்து பரவசமடைந்து தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். அந்த வேம்பு மரம் தற்பொதும் விருட்சமாக ஆலயத்தின் பின்புறம் இருக்கின்றது.

எனவே மயிலில் ஒளிவெள்ளமாக வந்து இறங்கிய முருகக் கடவுள் அந்தணராககாட்சி தந்து தன்னை அடையாளப்படுத்தி வேலூன்றி இங்கு விருப்புடன் வீற்றிருக்கின்றார் என்ற நம்பிக்கை மக்களிடம் வேரூன்றியது.

அந்த நம்பிக்கையின் விளைவாக பந்தலுக்கு விடை கொடுத்து ஆலயம் அழைத்தார்கள். ஆலயம் காலத்துக்கு காலம் துரித வளர்ச்சி பெற்று, 1956 ஆவணி 7ல் பரிபாலன மூர்த்திகள் சகிதம் முறைப்படி பெரும் பொருட் செலவில் குடமுழுக்குச் செய்யப்பட்டது.

இதன்பின்னர் குறித்த விருட்ச பகுதியில் இருந்து முன்பு தோன்றிய ஒளிவெள்ளம் வருடாவருடம் கதிர்காமக் கொடியேற்ற தினத்தன்று வெளிக்கிழம்புவதையும் மீளவும் இந்த ஆலய கொடியேற்றத்திற்கு (விருட்சத்திற்கு) வருவதையும் பல பக்தர்கள் பார்வையிட்டனர்.