வடக்கு, கிழக்கு மலையகம் என்ற வேறுபாடு இருக்க கூடாது. அதை நாம் விரும்பவில்லை.






(க.கிஷாந்தன்)

நாடு பூராவும் உள்ள தமிழர்களின் அபிலாஷைகளை நிவர்த்திக்கவே இந்த புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் 11.07.2019 அன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், எம்பியுமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் இதன்போது கலந்து கொண்டன.

இதில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு, கிழக்கு மலையகம் என்ற வேறுபாடு இருக்க கூடாது. அதை நாம் விரும்பவில்லை. மலையகத்தில் உள்ளவர்களும் எமது தாய், தந்தையர்கள் தான் வடக்கு, கிழக்கு மலையக உறவுகளை பிரித்து வேறுபாடாக பார்ப்பது முற்றிலும் தவறு என்பதை நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

இந்த புதிய கூட்டணியானது திடீரென ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. நீண்ட காலமாக கலந்தாலோசித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். தற்போது மூன்று கட்சியில் இக்கூட்டணியில் இணைந்துள்ளன. எதிர்வரும் காலத்தில் இக்கூட்டணியோடு இணைவதற்காக கட்சிகள் பலவும் வருவார்கள் என்பது நம்பிக்கையை தருகின்றது.

தமிழ் மக்களுக்கு இக் கூட்டணி ஊடாக நல்லதொரு செய்தியை வெளிப்படுத்துவோம். நமது சமூகத்துக்கு வித்தியாசமான கூட்டணியாக இந்த புதிய கூட்டணி அமையும் என்பதை தெளிவுடன் தெரிவிக்கின்றோம்.

அதேவேளையில் வடக்கு கிழக்கில் இருக்கும் பல கட்சிகள் இக்கூட்டணியில் இணைவதற்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புகளை இதுவரை விடுக்கவில்லை. இருப்பினும் விரைவில் அவர்களும் எமது கூட்டணியோடு இணைவார்கள் என்ற உறுதியும் உள்ளது.