வறட்சியினால் 567,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!



நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் நிலவும் வறட்சி காரணமாக 5 இலட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, புத்தளம், குருணாகல், வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, கண்டி, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை, அனுராதபுரம், அம்பாறை, திருகோணாலை மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 1,59,123 குடும்பங்களைச் சேர்ந்த 5,67,662 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மொத்தமாக 109 குடும்பங்களைச் சேர்ந்த 420 பேர் மண்சரிவு, கடலரிப்பு, பலத்த காற்று, தீ மற்றும் மின்னல் தாக்கம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் இந்த அனர்த்தம் காரணமாக சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 272 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் மேல், தென்மேல் மற்றும் தென் கடற்பரப்புகளில் 2019 ஜுலை 19 ஆம் திகதி வரை காற்றுடன் கூடிய மழை நிலைமையில்மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.