இலங்கையில் 115,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை



18 வயதுக்குக் குறைந்த சுமார் 1 இட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. 

இது குறித்த ஆய்வு அறிக்கை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. 

இவ்வாறான சிறுவர்கள் பாடசாலை பருவத்திலேயே போதைப்பொருளுக்கு அடிமையாகி விடுவதாக, கலால் திணைக்கள பரிசோதகர் பி. செல்வகுமார் தெரிவித்தார். 

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகஸ்தர்கள், ஆரம்பத்தில் இலவசமாக போதைப்பொருட்களை வழங்கி, அவர்களை அடிமைப்படுத்தி விடுவதாகவும் செல்வகுமார் விவரித்தார். 

இலவசமாக போதைப்பொருளைப் பெறுகின்ற சிறுவர்களுக்கு, ஒரு கட்டத்தில் இலவச விநியோகம் நிறுத்தப்படுவதாகவும், அதனை அடுத்து அவர்கள் பணம் கொடுத்து போதைப்பொருள்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். 

"எனவே, போதைப்பொருளை வாங்குவதற்கான பணத்துக்காக, சிறுவர்கள் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார். 

"சுற்றுலா பிரதேசங்கள் மற்றும் அவற்றின் அண்மையில் இருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையும், சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடியாமையாதலும் அதிகமாகக் காணப்படுகின்றது" என்றும் அவர் குறிப்பிட்டார். 

கிழக்கு மாகாணத்திலுள்ள சுற்றுலாப் பிரதேசங்களான அறுகம்பே, பாசிக்குடா ஆகிய இடங்களிலும், அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதிகமாகக் காணப்படுவது இதற்கு உதாரணமாக அவர் கூறினார். 

"விளம்பரங்களால் ஈர்க்கப்படுதல், ஆசை ஊட்டப்படுதல் ஆகியவற்றினால் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்த சிறுவர்கள் எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள்" என்றார் அவர். 

இலங்கையில் யுத்தம் நிலவிய காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டதால், போதைப்பொருள் செயற்பாடுகள் பரவியதாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு இலங்கை முக்கிய தளமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது இந்த நிலவரத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாகவும் செல்வகுமார் கூறினார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் போதைப் பொருட்களுக்கு எதிரான திட்டத்துக்கு இணங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனால்தான் அண்மைக் காலங்களில் அதிக அளவு போதைப் பொருள்களை கைப்பற்ற முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

சிறுவர்கள் இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையாவதன் மூலம் அவர்கள் மலட்டுத் தன்மையை அடைவதாகவும் செல்வகுமார் கவலை தெரிவித்தார். 

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 18 வயதிற்குக் குறைந்த சிறுவர்களில் சுமார் 6,100 பேர் ஹெரோயினுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நாளொன்றுக்கு சுமார் 1 இலட்சம் வரையானோர் ஹெரோயினை தேடி அலைவதாகவும், அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைோரில் 1,500 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் போதைப்பொருளுக்கு அடிமையான சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக, தேசிய அளவிலான நடவடிக்ககையை முன்னெடுக்குமாறு, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.