கடும் வறட்சியின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் கடும் மழை




(பாறுக் ஷிஹான்)


நாட்டில் மழைவீழ்ச்சி குறைந்து காணப்பட்டதுடன் வெப்பத்தின் அளவும் அண்மை காலமாக அதிகமாக காணப்பட்ட நிலையில் நாட்டில் சில இடங்களில் மழை பெய்தது. அம்பாறை மாவட்டத்திலும் கடும் வறட்சியின் பின்னர் கடும் மழை இடி மின்னலுடன் மழை சில மணிநேரம் தொடர்ந்து பெய்தது.

வறட்சியாலும் வெப்பத்தாலும் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளும் மக்களும் மழையை எதிர்பார்த்திருந்தபோது இன்றைய மழை மக்களுக்கு மகழ்சியளித்தாலும் சில மணிநேரங்கள் மட்டுமே மழை நீடித்திருந்தது.

குறிப்பாக பெரியநீலாவணை மருதமுனை நற்பிட்டிமுனை கல்முனை காரைதீவு சாய்ந்தமருது நிந்தவூர் அம்பாறை நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை அதிகளவாக பெய்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் நாட்டில் தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இதனடிப்படையில் சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.