சுமந்திரனின் கருத்துக்கு யஹ்யாகான் பாராட்டு!



முஸ்லீம் தனியார் சட்டத்தினை நீக்க அனுமதிக்க முடியாது, திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமாயின் அவை முஸ்லீம் சமூகத்தினரின் முழுமையான இணக்கப்பாட்டுடனே இடம்பெற வேண்டும் என தமிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.

அண்மைய ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லீம் சமூகம் இனவாத கருத்துகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, முஸ்லீம் சமூகத்தினை பயங்கரவாத தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபடுத்தி குற்றம் சாட்டியிருந்தனர். இஸ்லாமிய மார்க்க விடயங்களில் நேரடியாக பிழை கண்டனர். அன்றாட மார்க்க கடமைகளில் சந்தேகத்தை ஏற்படுத்தி மக்களின் மனங்களை காயப்படுத்தினர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து சமூகத்ததுக்கு ஆறுதலளிக்கிறது. இதனை நாம் பாராட்டுகிறோம். முஸ்லீம் சமூகம் சுமந்திரன் போன்ற தலைமைகள் மீது கொண்டுள்ள நம்பிக்கை இன்னும் வீண்போகவில்லை என்பதனையும் எடுத்துக் காட்டுகிறது. 

முஸ்லீம் சிறுபான்மை சமூகம் பெரும்பான்மை நசுக்கப்படுகிற போது அதற்கு எதிராக மற்றொரு சிறுபாண்மை சமூகத் தலைவர்கள் குரல் கொடுப்பது எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் தமிழ் கூட்டமைப்பும் ஒன்றினைந்து பயணிக்க சிறந்த வாய்ப்புகளை கொடுக்கும் எனவும் நம்புகிறோம் என ஏ சி யஹ்யாகான் மேலும்தெரிவித்துள்ளார்.