திருமலை மாணவர் படுகொலை;குற்றவாளிகள் எவரும் தப்பிக்க முடியாது



திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் அரச படையினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. படுகொலையை நிரூபிக்கும் தகுந்த சாட்சிகள் – ஆதாரங்கள் இல்லை என்று கூறி சந்தேகநபர்கள் அனைவரையும் எப்படி விடுவிக்க முடியும்?. என்று கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கொலைக் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது எனவும் தெரிவித்தார்.

திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச படையினர் மீது தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர்கள் அனைவரையும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருந்த 12 விசேட அதிரடிப் படையினரும், ஒரு பொலிஸ் அதிகாரியும் என அரச படையைச் சேர்ந்த 13 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் அன்றிரவு 7 மணியளவில் திருகோணமலை கடற்கரையில் – காந்தி சிலைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த அரச படையினரால் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களாவர். இந்தச் சம்பவத்தில் மேலும் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.

மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகன், தங்கதுரை சிவானந்தா மற்றும் சண்முகராஜா கஜேந்திரன் ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.

இந்தக் படுகொலையை அரசும், இராணுவத்தினரும், பொலிஸாரும் ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்றும், அரச படைகள் மீது இவர்கள் கைக்குண்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கைக்குண்டு வெடித்து அவர்கள் உயிரிழந்தனர் என்றும் கூறினர்.

ஆனால், இறந்த மாணவர்களின் தலைகள் உட்பட உடல்களில் துப்பாக்கிச்சூடுகள் காணப்படுகின்றன எனவும், அவர்கள் மிகக் கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் சட்ட மருத்துவ பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விடயத்தைப் புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையிட்ட ‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ திருகோணமலை செய்தியாளர் எஸ்.சுகிர்தராஜனும் சில நாட்களின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதேவேளை, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவுகள் ஆகியோருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாட்டில் புகலிடம் கோரினர். எனினும், மாணவர்களின் படுகொலை தொடர்பில் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவுகள் நீதி கோரி நீண்ட சட்டப் போராட்டம் நடத்தினர். சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரஜீகரின் தந்தை மருததுவர் மனோகரன் ஐ.நா. மனித உரிமைகள் சபையிலும் சாட்சியமளித்திருந்தார்.

மாணவர்களின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 12 விசேட அதிரடிப் படையினரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013ஆம் ஆண்டு ஜுலை 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையின் நீதிப்பொறிமுறை குறித்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த விவகாரமாக இந்தப் படுகொலை வழக்கு விளங்கியது. சர்வதேச அமைப்புகள் இந்தப் படுகொலையைப் பகிரங்கமாகக் கண்டித்திருந்தன.

திருகோணமலை நீதிவான் நீதிமன்ற பிரதான நீதிவான் எம். எச். மொஹமட் ஹம்சா முன்னிலையில் கடந்த புதன்கிழமை இந்த வழக்கு கட்டளைக்காக வந்தது.

“வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் மன்று திருப்தியடையும் வகையில் சான்றாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. அதனால் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 153 மற்றும் 154ஆம் பிரிவுகளின் கீழ் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் சான்றாதாரங்களுடன் முன்வைக்கப்படவில்லை. அதனால் 13 எதிரிகளும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர்” என்று பிரதான நீதிவான் எம். எச். மொஹமட் ஹம்சா கட்டளை வழங்கினார்.

படுகொலையுடன் சம்பந்தப்பட்ட அரச படையினர் 13 பேரும் விடுவிக்கப்பட்டமை நீதியை எதிர்பார்த்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவுகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது குறித்து அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது,

“2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் அரச படையினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. 5 மாணவர்களும் துப்பாக்கியால் மிகக்கிட்டிய தூரத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற சட்ட மருத்துவ பரிசோதனையின் அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 2 மாணவர்கள் நேரடிச் சாட்சிகளாக உள்ளனர். இவர்கள் இருவரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 6 சாட்சிகள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றில் சாட்சியமளிக்கவில்லை. இந்தநிலையில், படுகொலையை நிரூபிக்கும் தகுந்த சாட்சிகள் – ஆதாரங்கள் இல்லை என்று கூறி சந்தேகநபர்களை எப்படி விடுவிக்க முடியும்?. இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். படுகொலைக் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகக்காட்டமான அறிக்கையொன்றை விரைவில் நான் வெளியிடவுள்ளேன்” – என்று அவர் தெரிவித்தார்.