திருகோணமலை மாவட்டத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு வீடு, மலசலகூடம் நிர்மாணிக்க நிதியுதவி



(ஆதம்)

கிழக்கு மாகாணத்தில் வீடு மற்றும் மலசலகூடம் இல்லாத வறிய குடும்பங்களுக்கு வீடு, மலசலகூடங்களை நிர்மாணித்து கொடுக்கும் பொருட்டு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த திட்டத்தினூடாக திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு மற்றும் மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (17) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.சுபைர் தலைைமயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சுமார் 70 குடும்பங்களுக்கு வீடு மற்றும் மலசலகூடங்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தண, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் நெடுஞ்செலியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.