பிரதமர் ரணிலுக்கு 7 நாட்கள் காலக்கெடு





ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான கலந்துரையாடலை, ஏழு நாள்களுக்குள் நடத்துமாறு, அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

அவ்வாறானதொரு கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ தெரிவித்தார்.

கட்சியின் நாடாளுமன்ற குழுவையும் செயற்குழுவையும் கூட்டி, ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஒரு முடிவை எடுக்குமாறே அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, நேற்று (19) மாலை கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்படவுள்ள விடயங்கள் பற்றியே ஆராயப்பட்டன.

பிரதமர் ரணில் தலைமையில் கூடிய அந்தக் கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்விதமான கருத்தாடல்களும் இடம்பெறவில்லையென அறியமுடிகின்றது. 

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து இன்றைய (நேற்றைய) கூட்டத்தில் பேசப்படுமெனவும் இல்லையேல் தீர்க்கமான முடிவொன்று எட்டப்படுமென, அமைச்சர் சஜித்தின் ஆதரவாளர்கள், ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.

எனினும், நேற்றைய கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், எதுவுமே பேசப்படவில்லையென அறியமுடிகின்றது.