கோட்டைக்கல்லாற்றிலிருந்து தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான 8வது புனித பாரிய யாத்திரை




(ரவிப்ரியா)

கோட்டைக்கல்லாறு புனித தல யாத்திரை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கான இருநாள் புனித தல யாத்திரை சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்களோடு ஒருகிலோமீற்றர் நீளத்தில் திங்களன்று இன்று (13) அதிகாலை ஆரம்பமாகி ஓந்தாச்சிமடம், எருவில். களவாஞ்சிக்குடி பட்டிருப்பு ஆலயங்களை கடந்து பட்டிருப்பு பாலத்தைக் கடந்து, ஆலயங்களில் சக்திவேல் மாற்றப்படுவதையும் படங்களில் காணலாம். பெரியபோரதிவு, கோயில்போரதீவு புன்னக்குளம் ஆகிய இயற்கை எழில்மிகு கிராமங்களின் ஆலயங்களைத் தரிசித்தவாறு யாத்திரை தொடர்ந்தது.

தும்பங்கேணி கண்ணகி அம்மன் ஆலயத்தின் நிர்வாகம் மதியபோசனம் ஒழுங்கு செய்துள்ளது. மதியபோசனத்தை முடித்துக் கொண்டு திக்கோடை 10ம் கிராமம், செல்வபுரம் ஆகிய கிராம ஆலயங்ளை தரிசித்தவாறு வாழைக்காலை செல்வக்கதிர்காமம் என அழைக்கப்படும் பிள்ளையார் ஆலயத்தில் இரவு தரித்திருந்து மறுநாள் புதன் (14) அதிகாலை தாந்தாமலை நோக்கி பாதயாத்திரை தொடர்ந்து, ஸ்ரீமுருகன்ஆலய சந்நிதியில் சங்கமிக்கும்.

இந்த பாதயாத்திரையில் பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம், எருவில். களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, குறுமண்வெளி,மகிளுர் கிராமங்களைச் சேர்ந்த பெருமளவ பக்தர்கள் கலந்துகொண்டதால் பட்டிருப்பு பாலத்தைக் கடக்கும் போது பாதயாத்திரிகர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. இரவு வாழைக்காலையை அடையும் போது அது மும்மடங்காகி இரண்டு கிலோ மீற்றர் நீளத்தை அதுதொட்டு  விடுமென அமைப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். வழக்கம்போல் இம்முறையும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடலாஸாவம் இப்பாத யாத்திரையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்திற்கு ஆலயம் பக்தர்களால் கொண்டுவரப்பட்ட சக்திவேல் கைமாறியது பக்தர்களுக்கு சிறந்த பாக்கியமாக அமைந்தது.வழிநெடுகிலும் முருகன் புகழ் பாடும் கீர்த்தனைகள், அரோஹரா ஹோசங்கள் கிராமங்கள் தோறும் பக்திப் பரவசத்தைப் பரப்பியது.

அடுத்த வருடம் இந்த பாதயாத்திரை பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாக வேண்டும் என்றகோரிக்கையும் பக்தர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. இது விஸதரிக்கப்பட வேண்டியது அவசியம்.

இந்த பாதயாத்திரையானது சமயத்திற்கு அப்பால் கிராமங்களையும் ஒன்றிணைக்கின்றது. இதன்மூலம் எமது சமூக ஒற்றுமை வலுப்பெறும்.அன்னியோன்னியம் அதிகரிக்கும். குறிப்பாக படுவானுக்கும் எழுவானக்கும் இடையே பிரிக்கமுடியாத ஒரு உறவுப்பாலத்தைக் கட்டியெழுப்பும். மறைமுகமாக ஒரு மகிழ்ச்சிகரமான பக்திமயமான ஒன்று கூடலாகவும் அமையும்.

அத்துடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தாந்தாமலை முருகக் கடவுளின் வரலாறு பௌத்த ஏகாதிபத்தியவாதிகளால் திரிபுபடாமல்இருப்பதற்கான வரலாற்றுப் பதிவாகவும் இப்பாதயாத்திரை எதிர்காலத்தில் பங்களிப்புச் செய்யும். 

சமய ரீதியாகப் நோக்குமிடத்து, இளம் சமூகத்திடையே சமயம் சம்பந்தமான ஒரு ஈர்ப்பையும். விழிப்புணர்வையும் உத்வேகத்தையும்நிச்சயமாக ஏற்படுத்தும். சமய சிந்தனைகளில் இளைஞர் சமூகம் மூழ்கும்போது (அதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கின்றது)எமது சமூகத்தில் நல்லொழுக்கம் என்பது நிலைநாட்டப்படும்.

எனவே எவ்வகையில் நோக்கினாலும் 8 வயதைக் கடந்த நிற்கும் இந்த ஒன்றியம் ஆண்டுதோறும்; கலந்து கொள்ளும் பாத யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அடிப்படையில் அபார வளர்ச்சி பெற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.