க.பொ.த சாதாரண தர மாணவருக்கான மாதாந்த கருத்தரங்கு



கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தால் க.பொ.த (சா/த) பரீட்சை – 2019 இற்குத் தோற்றும் மாணவர்களுக்காக மாதாந்த கருத்தரங்கு இம்மாதம் 17, 18, 19, 20 ஆம் திகதிகளில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க (EDS) சிவநேசராசா மண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கான நிதி உதவியை கனடாவில் வதியும் கல்லடி உப்போடையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் விமலநாதன் (கண்ணன்) வழங்கினார்.

முதல் இருநாள் பயிற்சிப் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து இரு நாட்கள் கருத்தரங்கும் நடைபெற்றது. வரலாறு , தமிழ் , கணிதம் , விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்காக நடாத்தப்பட்ட பரீட்சை , கருத்தரங்கு என்பவற்றிற்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டு பயன்பெற்றனர். ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் திரு. தியாகராஜா சரவணபவன் அவர்களுடன் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

முதல்நாள் நிகழ்வு கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் திரு. சி. தேவசிங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 2012 ஆம் ஆண்டில் இருந்து நோக்குகின்ற போது மாணவர்களின் பிரத்தியேகக் கல்விக்கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பெறுபேறு அடைவுமட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீழ்ச்சி அடைந்து செல்கிறது. சில தனியார் கல்வி நிலையங்கள் மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நியமங்களை கொண்டிராதது எனக்கு கவலை தருகிறது.

சரியான கழிவிடங்கள் இன்மை காரணமாக தனியார் கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் சிறுநீர்த்தொற்று காரணமாக சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மாநகரசபையானது சிறுவர்களின் நலனுக்கான பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளது. சிறுவருக்கான மகிழ்ச்சியான மாநகரமாக மட்டக்களப்பை மாற்றும் எனது செயற்திட்டத்தில் ரோபோக்களை உருவாக்கும் பயிற்சிகளை வயது அடிப்படையில் வழங்க தீர்மானித்து உள்ளேன்.

அண்மையில் 'நுட்பம் காணல்' என்ற தொனிப்பொருளில் செயல்திட்ட முகாம் ஒன்றை ஒழுங்குபடுத்தி இருந்தோம். இதில் 98 மாணவர்கள் பங்குகொண்டனர். இன்று சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளை மட்டும் சிலர் முன்வைத்துவிட்டுப் போகின்றனர். அவர்களிடம் தீர்வு இல்லை. எமது மாணவர்களிடம் பிரச்சினைகளைக் கூறி அதற்கான தீர்வுகளையும் முன்வைக்குமாறு கோரினோம். இதில் 42 மாணவர்கள் பிரச்சினைகளையும் அதற்கான உரிய தீர்வுகளையும் முன்வைத்தனர். ஒரு  'Smart phone' ஐப் பயன்படுத்தி டெங்கு நுளம்பை ஒழிப்பது தொடர்பான விடயம் மிகச் சிறந்ததாக இனங்காணப்பட்டது. இது எதனை வெளிப்படுத்துகிறது? பல்வேறு திறன்கொண்ட மாணவர்கள் எமது மத்தியில் காணப்படுகின்றனர். இவர்களுக்கான களம் இதுவரையில் அமைத்துக்கொடுக்கப்படவில்லை. இதனை மாநகரசபை முன்னெடுக்கும்.

மாணவர் கல்வியில் கல்வித் திணைக்களத்திற்கு அப்பால் சமூகமும் அக்கறைகொண்டு செயல்படுவது பாராட்டுதலுக்குரியது. இந்த கல்லடிப் பிரதேச சமூகம் இதற்கு முன்மாதிரியாக செயல்படுவது சிறப்பு. இதனை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி உச்சப் பயனை அடையவேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தனது உரையில் குறிப்பிட்டார்.