மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்தில் டிஜிட்டல் நூலகம் அமைச்சர் அஜித் பி பெரேராவினால் திறந்து வைப்பு





(சரவணன் )

மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்தில் முதல் தடவையாக நிர்மானிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகம் தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பி பெரேராவினால் இன்று(13.08.2019) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக ஒரு கோடி ரூபா செலவில் தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சினால் தகவல் தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிலையம், தேசிய பொது நூலகம் என்பவற்றின் அணுசரணையுடன் இந்த டிஜிட்டல் நூலகம் மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இதனை திறந்து வைக்கும் வைபவத்தில் தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பி பெரேரா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறீநேசன், எஸ்.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.சத்தியசீலன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சித்திரவேல், பிரதி ஆணையாளர் எஸ்.தனஞ்சயன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ஊழியர்கள் தகவல் தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிலையத்தின் அதிகாரிகள் தேசிய நூலகத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த டிஜிட்டல் நூலகத்தின் மூலம் மாணவர்கள் இளைஞர்கள் பொது மக்கள் இணைய வசதியை பயன்படுத்தி வேறு நண்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.


மட்டக்களப்பு சிறந்த பசுமை மிக்க நகராக்கும் ஸ்மார்ட் மட்டக்களப்பு எனும் திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாநகர சபையினால் இந்த டிஜிட்டல் நூலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.