மாற்றுத்திறன்கொண்ட மாணவர்கள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கிடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம்





(ஏ.எம்.றிகாஸ்)

மாற்றுத்திறன்கொண்ட மாணவர்கள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கிடையே விளையாட்டின் மூலமாக சமத்துவம் , சமாதானம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய ஐரோப்பிய காற்பந்து சங்கம் மற்றும் அவுஸ்திரேலிய நிதி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மாகாண கல்வித்திணைக்களத்தின் வழிகாட்டலில் அம்பாறை , கல்முனை, மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மத்தி ஆகிய கல்வி வலயங்களிலுள்ள சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களைக்கொண்ட விசேட தேவையுடையோர் பாடசாலைகளின் ஆசிரியர்கள் கல்வித்திணைக்களத்தின் துறைசார் அதிகாரிகளையும் பயிற்றுவிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹியுமனிட்டி அன்ட் இன்குளுஷன் மற்றும் கெமிட் ஆகிய நிறுவனங்கள் இத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளன. மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் கிறிஸ்டி குணரட்னம் தலைமையில் பயிற்சிச்செயலமர்வு நடைபெற்றது. 

இச்செயலமர்வில் மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயங்களின் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர். இச்செயலமர்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு வழிகாட்டிநூல்கள் மற்றும் இறுவெட்டுக்களும் வழங்கப்பட்டன.

சமூகம் , பொருளாதாரம், பௌதீகம் மற்றும் நிறுவனம் போன்ற இதர தடைகளின் காரணங்களினால் சமூகத்திலிருந்து புறந்தள்ளப்படும் மாற்றுத்திறன்கொண்ட மாணவர்கள் ஏனைய மாணவர்களுடன் இணைந்து உள்வாங்கப்பட்ட விளையாட்டுக்களில் ஈடுபடுவதன்மூலமாக சமத்துவத்தை ஏற்படுத்துவதும் இனங்களிடையே சமாதானம் சகவாழ்வை ஏற்படுத்துமே இத்திட்டத்தின் பிரதான நோக்கமென கெமிட் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் மயுரன் பிரசாந்தினி தெரிவித்தார்.

திட்ட உத்தியோகத்தர் லியோன் லோரன்ஸ், ஸ்டீவ் ஹார்நெட் மற்றும் ஜி.தங்கேஸ்வரன் ஆகியோர் வளவாளர்களாக செயற்பட்டனர்.