வரலாற்றுத் தொன்மை மிகு கல்லடிப் பேச்சியம்மாள்



இலங்கையில் காணப்படும் புகழ்மிகு அம்மன் ஆலயங்களுள் மட்டக்களப்பு, கல்லடி உப்போடை, நொச்சிமுனையில் அமைந்துள்ள ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயமும் ஒன்றாகும். இவ்வாலயமானது இற்றை 350 ஆண்டுகளுக்கு மேல் உருவான வரலாற்றைக் கொண்டமைந்த பழைமைவாய்ந்த ஆலயமாகும். ஆலயத்தின் அமைவிடத்தின் சிறப்பினை பார்க்கும் போது தேத்தாமர நிழலின் கீழ் ஓலைக்குடிசையாக அமைந்து காணப்படுவது தனிச்சிறப்பாகும். கேட்பவர்க்கு கேட்ட வரத்தை வாரி வழங்கும் தாயாக பக்த அடியார்க்கு இப் பேச்சித் தாயார் காணப்படுகின்றார்.

குறிப்பாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இன்னல் உறும் அடியார்கள்; பிள்ளை வரம் வேண்டி நேர்த்தி வைப்பார்கள். குறித்த நேர்தியின் பலனாக அம்பாளின் அருள் கடாட்சத்தினால் பிள்ளைப் பாக்கியம் பெற்றுள்ள அடியார்கள் ஏராளம். இவ்வாறு  ஆயிரக்கணக்கான அடியவர்களின் குறைகளைக் களைந்து அருள்பாலிக்கும் அருட்சக்தியாக அம்பாள் இங்கு வீற்றிருக்கின்றாள்.



பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்தச் திருச்சடங்கானது 04.08.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி இன்று 12.08.2019 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 5.00 மணிக்கு பள்ளயத்துடன் நிறைவடைந்தன. இவ் அம்பாளின் ஆலயமானது இப் பிரதேசத்திற்கு மாத்திரம் உரிய ஆலயமாக இல்லாமல் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பக்த அடியார்கள் ஆயிரக்கணக்காக வெள்ளம் போல் திரண்டு வந்து வணங்கும் தேசத்து ஆலயமாக இன்று காணப்படுகின்றது.

இலண்டன், கனடா, சுவீஸ், அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளில் வசிக்கும் இப்பிரதேச மக்கள் பலர் இச் சடங்கு உற்சவகாலத்தில் ஓடோடி வந்து சடங்கில் கலந்து சிறப்பித்து அம்பாளை வணங்குகின்றார்கள். இவாலயத்தில் கோயில் கொண்டிருக்கும் பேச்சித்தாயார் தனது வேண்டுகோள் பலவற்றை அவரின் மெய்யடியார்களின் கனவில் தோன்றி கூறியிருக்கின்றார். இதன் பிரகாரம்தான் பல இலட்சம் ரூபாய் நேர்கடனாக இவ் ஆலயத்திற்கு கிடைக்கப்பெற்றாலும் இன்றும் கல்லாலான கட்டிடமாக கட்டப்படாது ஆலயத்தின் உள்ளே மணலும் ஓலைக் கூரையும், ஓலைக் குடிசையும் அமைத்து காணப்படுவது இவ்வாறான ஒரு அற்புதத்தின் விளைவேயாகும்.

7 ஆம் நாள் நெல் குற்றும் சடங்கு நடைபெறும். இது கண்கொள்ளாக் காட்சியாக காணப்படும். பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு வீடு வீடாகச் சென்று பேச்சித் தாயாருக்கு மடிப்பிச்சை தாருங்கள் என்று கேட்டு வாங்கி மடி நிறைய நெல்லைச் சுமந்து வந்து கொட்டுவார்கள். இதில் சில ஆண்களும் நேர்தியாக மடிப்பிச்சை எடுப்பார்கள். இவ்வாறு எடுக்கும் மடிப்பிச்சை நெல் நூற்றுக்கும் மேற்பட்ட மூடைகளாகக் காணப்படும். அதனை ஆண்களும் பெண்களும் உரல் உலக்கை கொண்டு தேவாதிகள் நெல்லை குற்றி முடித்த பின் குற்றுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.



அதே போல் அடுத்தநாள் திங்கட்கிழமை பள்ளயம் நடைபெறும்.  மலை போல் உயரத்திற்கு மக்கள் பொங்கல் படைப்பார்கள். 7 கன்னிமார்களுக்கும் சர்க்கரை அமுது வழங்கப்படும், அதனோடே பள்ளயமும் வழங்கப்படும். இவை யாவற்றிற்கும் மேலாக தலைத்தெய்வாதி ஏனைய தெய்வாதிகளைச் சிறப்பான முறையில் வழிப்படுத்தி சடங்கு மிகச் சிறப்பாக எவ்வித தடங்கலுமின்றி நேர்தியாக நடப்பது தனிச்சிறப்பாகும்.

வைரவர் சடங்கு வைபவம் 14.08.2019 புதன்கிழமை நடைபெறும். இப் பூஜை நிகழ்வில் நோய் நொடிகள் நீங்கி ஆரேக்கியம் பெறும் பொருட்டு நூல்கள் கட்டப்படுகின்றது. இவ்வாறு கிராமிய தெய்வ வழிபாடுகளில் மக்களின் நம்பிக்கையினையும், பக்தியினையும் பறைசாற்றுகின்ற விதமாக கல்லடிப் பேச்சியம்பாளின் திருச்சடங்கு நிகழ்வுகள் எடுத்தியம்புவதனைக் காணக்கூடியதாகவுள்ளது.