ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஊடக அமைப்புக்களுடனான நல்லெண்ண சந்திப்பு



(ஸாதிக் ஷிஹான்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஊடக அமைப்புக்களுடனான நல்லெண்ண சந்திப்பு


புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஊடக அமைப்புக்களுடனான நல்லெண்ண சந்திப்பு 19ஆம் திகதி திங்கட்கிழமைகொழும்பில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் தலைமையில் கொழும்பு 5, கிருல வீதியில் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த ஒன்று கூடலில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க உட்பட பிரதான ஏழு ஊடக அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு, நல்லிணக்கம், ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாட்டை மேலும் வலியுறுத்தும் வகையில் புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் நாட்டின் தற்போதைய நிலைமையில் சகல ஊடக அமைப்புக்களும் கடந்த காலங்களை போன்று எதிர்காலத்திலும் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில் ஒவ்வொரு அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் தத்தமது அமைப்பு சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்தனர்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், இலங்கை இதழியல் கல்லூரி, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஸ்ரீரங்கா முஸ்லிம் மீடியா போரம், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பு, ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளே ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் வலியுறுத்தினர். 

மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான், பொருளாளர் ஜெம்ஸித் அஸீஸ் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் இந்த ஒன்று கூடலிலும் கலந்துரையாடலிலும் கலந்து சிறப்பித்தனர்.