வடகிழக்கின் அழிவுக்கு காரணம் கோத்தபாய ராஜபக்சவே - இரா . துரைரெட்ணம் குற்றம்சாட்டு.



( எரிக் )

வடக்கு கிழக்கில் ஏற்பட்ட ஒட்டுமொத்தமான அழிவுகளுக்கும் காரணமாக அமைந்தவர் இந்த கோட்டாபாய ராஜபக்ஸ என்பதே உண்மை என முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபாய அவர்களை ஆதரிக்க கூடியவாறு தமிழ் தலைமைகள் தங்களது கருத்துக்களை சொல்லுவது என்ற விடயத்தில் சரி பிழை இருக்கலாம் ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அதை ஏற்று விடமாட்டார்கள்.

தேர்தல் ஆணைக்குழுவால் தேர்தல் திகதி அறிவிக்கப்படாத நிலையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சந்திக்குச் சந்தி மூலைக்கு மூலை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

இதற்கு ஒரு எடு கோளாக மக்கள் மத்தியில் ஜனாதிபதி தேர்தலுக்கு கூடுதலான விகிதம் வாக்களிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

30 வருட காலம் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக போராடி மிகவும் கூர்மை தனத்தோடு வலிமையோடு துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் மிகத் துன்ப நிலைகளை சுமந்து தமிழ் மக்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராகின்றனர்.

மக்களின் பிரதிநிதிகள் , கட்சிகளை பொருத்தவரையில் மக்களின் ஒட்டு மொத்தமான அபிப்பிராயங்களை நிறைவேற்றும் வகையில் தேர்தலில் தங்களுடைய செயற்பாடு இருக்க வேண்டும் .

வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் நடைமுறை ரீதியான பிரச்சினை ஒன்று அதிகாரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஒன்று இரண்டு விடயங்களையும் எமது தமிழ் சமூகம் தாங்கி நிற்கின்றன அதிகாரப் பரவலாக்கல் ஆக இருக்கலாம் இந்த இரண்டு விடயங்களை பார்க்கும் போது ஜனாதிபதி தேர்தலில் இவ்விரண்டுக்கும் விடை கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.விடை கிடைக்குதோ இல்லையோ கட்சிகளைப் பொறுத்தவரையில் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முதலாவதாக வேட்பாளர்கள் தங்களது கொள்கை களை முன்வைக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு எந்தளவு அதிகாரங்கள் இருக்கின்றன எந்தளவுக்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றன என்பதை பொறுத்தே தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் வாக்குகளை ஆணையிட தயாராக இருக்கின்றார்கள்.யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்ற நிலைப்பாடு இருக்கின்றது. கடந்தகால பல அனுபவங்கள் கிழக்கு மாகாண சபை முறைமை அமுலில் இருக்கின்றன வடக்கு மாகாணசபையை கிழக்கு மாகாண சபை என்பது அமுலில் இருக்கின்றது .

கையில் உள்ள அதிகாரங்களை பலப்படுத்த வேண்டிய நடைமுறை திட்டம் கையில் இருக்க வேண்டும் இரண்டாவதாக நிரந்தரத் தீர்வு திட்டத்திற்கான ஒரு செயல் இருக்கவேண்டும் அந்த இரண்டு விடயங்களையும் கூடுதலாக அமல்படுத்தக் கூடிய ஜனாதிபதி யார் ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய கொள்கைகளை முன்வைத்து ஆகவேண்டும்.

இதன் பிறகுதான் இந்த கட்சித் தலைமைகள் தங்களுடைய கருத்துக்களையும் முடிவுகளையும் எடுக்க வேண்டும் அதற்கப்பால் மற்றவர்களுடைய தூண்டுதல்களுக்காக தமிழ் தலைமைகள் தங்களுடைய கருத்துகளைச் சொல்லி விடக்கூடாது .

ஆகவே எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சம்பந்தப்பட்ட விடயத்தில் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு உடந்தையாகி விடக்கூடாது அப்படி ஏமாற்ற நினைத்தால் வடக்கு கிழக்கு மக்கள் அதை நிராகரிப்பார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் சுமார் ஆறரை இலட்சம் ஏக்கர் காணியே மொத்தமாகவுள்ளது.இதில் ஒரு இலட்சத்து 11ஆயிரம் ஏக்கர் காணி வன இலாகா தங்களது காணியாக வர்த்தமானி பிரகடனம் செய்துள்ளது.

இதில் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 06.05.2017ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 2000ஆயிரம் ஏக்கர் காணி வலுமின்சக்தி அமைச்சினால் வர்த்தமானி பிரகடனப்படுத்தப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் முடக்கிவிட்டுள்ளது.இந்த திட்டத்தினை நாங்கள் முறியடிக்காவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான காணிகள் மத்திய அரசாங்கத்திற்குள் சென்று அதனை பெறுவதில் தமிழ் மக்கள் கஸ்டங்களை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கையினை பாதுகாக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.ஆனால் மக்கள் வாழுகின்ற காணிகளை அபகரிக்கமுடியாது.

வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பன்சேனை பகுதியில் பயிர்ச்செய்கை,விவசாயம்,கால்நடை வளர்ப்பு செய்யும் காணிகளை வலுமின்சக்தி அமைச்சு ஊடாக மத்திய அரசாங்கம் காணிகளை கையகப்படுத்தியுள்ளது.இதேபோன்று பல ஆயிரம் ஏக்கர் காணிகள் மத்திய அரசாங்கத்தினால் கையகப்படுத்தியுள்ளது. இவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.