பிரபாகரன் வந்த மார்க்கம் தவறானாலும் அவரிடம் இலக்கும் ஒழுக்கமும் இருந்தது – மஹிந்த


பிரபாகரன் வந்த மார்க்கம் தவறானாலும் அவரிடம் இலக்கும் ஒழுக்கமும் இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரிடம் ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டமை குறித்து கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, “பிரபாகரன் வந்த மார்க்கம் தவறானாலும் அவர் ஒரு நோக்கத்தைக் கொண்டு போரிட்டார். அவரிடம் இலக்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருந்தது.

ஆனால் தற்போது இடம்பெற்ற தாக்குதல்கள் அவ்வாறானது இல்லை. அவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவார்கள். அவர்களுக்கு நோக்கம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களுக்கான எதிர்காலத் தீர்வுத் திட்டம் தொடர்பாக அவர் தெரிவித்த போது, “இன்று சிலர் புதிய அரசியலமைப்பு வேண்டும் என்கின்றனர். வேறு சிலர் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வு கிடைத்தால் போதும் என்கின்றனர்.

ஆனால் தீர்வானது நாட்டைப் பிரிப்பதாக அமையக் கூடாது. இன்று இந்தியாவின் காஷ்மீரில் நடந்ததைப் பார்க்கின்றோம். எனவே நாம் எல்லாவற்றையும் புரிந்துகொண்டே தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.