கல்லடி அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தில் நாளை நெல் குற்றல் நிகழ்வு



வரலாற்று புகழ்மிக்க கல்லடி - உப்போடை, நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தில் இன்று (10.08.2019) சனிக்கிழமை 5ஆம் குறிச்சிப் பொதுமக்களினால் சடங்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கடந்த 04.08.2019 ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வரும் உற்சவ நிகழ்வுகளில் நாளை 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை மடிப்பிச்சை எடுத்தல், நெல் குற்றல் ஆகிய சடங்கு வைபவங்கள் சிறப்பாக இடம்பெற உள்ளன.

நெல்குற்றல் நிகழ்வானது அம்பாளின் அருள் வேண்டி பிரார்த்தித்து நேர்த்தி வைத்த அடியவர்கள் நாளை காலை மடிப்பிச்சை எடுத்து வீதிவழியே கால்நடையாக ஆலயத்தினை வந்தடைந்தடைகின்றனர். அதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் நெல்குற்றல் நிகழ்வு இடம்பெறுகின்றது.

இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து நாளை மறுதினம் 12.08.2019 திங்கட்கிழமை திருக்கும்பம் சொரிதல் வைபவம் இடம்பெற்று சடங்கு நிகழ்வுகள் இனிது நிறைவடையவுள்ளன.

பேச்சியம்மன் ஆலய நிருவாகத்தினர் சடங்கு வைபவங்களை பாரம்பரிய முறைக்கு ஏற்ப வழிநடத்திச் செல்வதுடன் சாயங்கால பூஜைகளை அடுத்து சொற்பொழிவுகளையும், கதாப்பிரசங்கங்களையும் அடியவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் நிகழ்த்துவதையும் கல்லடிப் பிரதேசத்தில் இந்துக்களின் பாரம்பரியம் நடைமுறைப்படுத்தப்படவும், பேணிக்காக்கப்படவும் பல்வேறு செயற்பாடுகளையும் முன்னின்று செய்வதனையும் காணக்கூடியதாகவுள்ளது.