மட்டக்களப்பு மாநகரசபையின் 22வது அமர்வு –பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆராய்வு.



( எரிக் )

மட்டக்களப்பு மாநகரசபையின் 22வது மக்கள் சபை அமர்வு நேற்று காலை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வின்போது கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கும் சபையின் அனுமதிகள் பெறப்பட்டன.மட்டக்களப்பு மாநகரசபையின் 22வது அமர்வு –பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆராய்வு

அத்துடன் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளையும் பெற்றுக்கொள்வது குறித்து பிரதிநிதிகளினால் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டன.

கம்பிரலிய திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் இது தொடர்பில் மாநகரசபை முதல்வரினால் விசேட கருத்துரைகளும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின் வளங்களைக்கொண்டு கம்பிரலிய திட்டத்தின் ஊடாக பெறப்படும் நிதிகள் அதிகளவான பயனை மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இங்கு மாநகர முதல்வரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது மாநகரசபையின் நிதிக்குழு மற்றும் வேலைகள் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்காக வாக்கெடுப்பு கோரப்பட்டு நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் வேலுப்பிள்ளை தங்கேஸ்வர நிதிக்குழுவுக்கும் சீ.ஜெயந்திரகுமார் வேலைகள் குழுவுக்கும் வாக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டனர்.

இன்றைய அமர்வின்போது விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறை உட்பட சில பகுதிகள் பாதிக்கப்பட்டதுள்ளது தொடர்பில் அப்பகுதி உறுப்பினர்களினால் சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன்பேது எதிர்காலத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் அனர்த்த முகாமைத்து நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினைப்பெற்றுக்கொள்ளும் அதேவேளையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்ளக்கூடிய கிணறுகளை இனங்கண்டு அவற்றில் இருந்தும் மாநகரசபையினால் குடிநீரைப்பெற்றுக்கொடுப்பதான நடவடிக்கையினை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக திருப்பெருந்துறை பகுதியில் மட்டக்களப்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல கிணறுகளின் நீரை பயன்படுத்தமுடியாத நிலையிலும் வறட்சியினால் குடிநீரைப்பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலும் பிரதேச மக்கள் பெரும் காணப்படுவதுடன் அன்றாட தேவைகளுக்கும் நீரைப்பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் அப்பகுதி உறுப்பினர்களினால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மட்டக்களப்பு மாநாகரசபைக்குட்பட்ட பொதுமக்களின் உதவியுடன் நீரைப்பெற்றுக்கொள்ளும் வகையில் உள்ள கிணறுகளை தூய்மைப்படுத்தி நீர் பாவனைக்கு தேவையான இடங்களுக்கு குடிநீருக்கு பயன்படுத்தமுடியாத நீர் என்ற வகையில் விநியோகம் செய்யவும் நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அதற்கு பொதுமக்கள் தமது ஆதரவினை வழங்கவேண்டும் எனவும் இதன்போது மாநகர முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் மட்டக்களப்பு மாநகரில் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனால் அமைக்கப்பட்டு பூர்த்தயடைத நிலையில் உள்ள பொதுநூலகத்தினை பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கையெடுப்பதாக கூறி தொடர்ந்து ஏமாற்றிவருவதாக இங்கு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் காந்தராஜனால் குற்றஞ்சாட்டப்பட்டது.

எனினும் குறித்த நூலகத்தினை கடந்த காலத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டவர்கள் எந்தவிதமான சட்ட ரீதியான நடவடிக்கையினையும் எடுத்திருக்காத நிலையில் அதனை அமைச்சரவை பத்திரம் மூலம் நிறைவேற்றி சகல சட்டரீதியான அனுமதிகளையும் எடுத்ததன் காரணமாக அதனை புனரமைப்பதற்கான காலம் சென்றதாகவும் தற்போது அதற்கான 200மில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடுசெய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் விளம்பரப்படுத்தப்பட்டு பூர்த்தியடைந்துள்ள நிலையில் கட்டிட திணைக்களத்தின் செயற்பாடுகளினால் இவை காலம் செல்வதாகவும் அதன் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும எனவும் முதல்வர் இங்கு தெரிவித்தார்.