சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கு முகமாக உற்பத்தி பயிற்சி



(ந.குகதர்சன்)

மட்டக்களப்பில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கு முகமாக LIFT நிறுவனத்தினால் ஒரு நாள் பயிற்சி நிகழ்வு நிறுவனத்தின் மாவட்ட காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

வாழைச்சேனை மற்றும் கிரான் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.

இவ்வாறான பெண் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதில் 23 வருடங்களாக சேவையாற்றி வரும் இந்தியா - திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தபராஜ் ஜோன்சன் என்பவரால் பத்து வகையான உற்பத்திகள் எவ்வாறு இலகுவான முறையில் இலாபகரமாக தயாரிப்பது என தயாரித்து கற்பிக்கப்பட்டது.

இதன்போது சொட்டு நீலம், மூட்டுவலி தைலம், தலைவலி தைலம், இஞ்சி ஜூஸ், நெல்லி ஜூஸ், புதினா ஜூஸ், கறிவேப்பிலை ஜூஸ், ஓமத்திரவம், பீற்றூட் ஜூஸ், சொக்கலேட் என்பன தயாரிக்கும் முறை கற்பிக்கப்பட்டது.

LIFT நிறுவனத்தின் வெளிக்கள இணைப்பாளர் எஸ்.தயாநிதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் LIFT நிறுவனத்தின் பொதுச் செயலாளர் திருமதி.ஜானு முரளிதரன் மற்றும் பொருளாளர் திருமதி.பத்மதர்ஷினி சுபாஷ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

LIFT நிறுவனத்திற்கு கிடைக்கின்ற நிதியுதவிகளைப் பொறுத்து எதிர்காலத்தில் இவ்வாறான பயிற்சிகள் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் என பொதுச் செயலாளர் திருமதி.ஜானு முரளிதரன் தெரிவித்தார்.