சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல், மஹ்மூத் கல்லூரி வளர்ச்சியில் எம்.சி.ஏ.ஹமீட் ஆற்றிய பணிகள் மகத்தானவை



(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதிலும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் வளர்ச்சியிலும் மர்ஹூம் எம்.சி.ஏ.ஹமீட் ஆற்றிய பணிகள் காலத்தால் அழியாத வரலாற்றுப் பதிவுகளாக அமைந்துள்ளன என்று சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் தலைவரும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் ஸ்தாபக அதிபருமான மர்ஹூம் எம்.சி.ஏ.ஹமீட் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 'வாழும் ஒரு சரித்திரம்' எனும் கருத்தரங்கம் நேற்று முன்தினம் சாய்ந்தமருது பேர்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கருத்துரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெளிநாட்டு வர்த்தக, மூலோபாய அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், முன்னாள் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.யாக்கூப், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா, முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், கல்முனை முஹைதீன் ஜும் ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் யூ.எல்.எம்.அமீன், முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஷீர், டாக்டர் யூ.பாறூக், சிரேஷ்ட ஆசிரியர்களான அஷ்ஷெய்க் எம்.ஏ.நுஹ்மான், ஏ.எல்.பல்கீஸ், ரீ.எம்.றிபாய், ஐ.ஏ.குத்தூஸ் ஆகியோரும் உரையாற்றினர்.

இந்நிகழ்வின் ஓர் அங்கமாக மர்ஹூம் எம்.சி.ஏ.ஹமீதின் மறுமை வாழ்வுக்காக விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது. சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் இமாம் அஷ்ஷெய்க் எம்.எம்.பாஹிர் துஆப் பிரார்த்தனையை நடாத்தி வைத்தார். அத்துடன் நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அங்கு அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மேலும் தெரிவிகையில்;

"சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் தலைவராக எம்.ஐ.மீராலெப்பை, செயலாளராக எம்.ஐ.முஹைதீன், பொருளாளராக எம்.சி.ஏ.ஹமீத் ஆகியோர் பணியாற்றிய காலம் இப்பள்ளிவாசலின் பொற்காலமாக கருதப்படுகின்றது. அக்காலப்பகுதியிலேயே பள்ளிவாசலுக்கு புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக இம்மூவரும் தம்மை அர்ப்பணித்து உழைத்தனர்.

எம்.சி.ஏ.ஹமீத் அவர்கள் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கட்டிட நிர்மாணப் பணிகள் இன்னும் உத்வேகம் பெற்றது. அதனால்தான் 2003 ஆம் ஆண்டில் இதனைத் திறந்து வைக்க முடிந்தது. இப்பகுதியில் மிகக்குறுகிய காலத்தினுள் பூர்த்தியடைந்த ஒரு பள்ளிவாசல் இதுவாகவே இருக்கிறது. சாதாரண மக்களின் நிதிப் பங்களிப்புடனேயே இப்பெரிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

எம்.சி.ஏ.ஹமீத் தலைவராக கடமையாற்றிய காலத்திலேயே பைத்துஸ் ஸக்காத் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். அத்துடன் மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கான இடமும் ஹமீத் அவர்களின் காலத்திலேயே பொறுப்பேற்கப்பட்டது. அவரது காலத்தில் இன்னும் பல சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததை எம்மால் இலகுவாக மறந்து விட முடியாது" என்று அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி குறிப்பிட்டார்.