காற்றோடு போன கனவுகள் நூல் வெளியீடு



(செ.துஜியந்தன்)


நாவிதன்வெளி பிரதேசத்தின் இளம் எழுத்தாளர் வை.கே.ராஜீ எழுதிய காற்றோடு போன கனவுகள் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா நாவிதன்வெளி பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் கவிமணி அம்.கௌரிதாசன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், பிரதேச சபை தவிசாளர் த.கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அகிலாபானு கலந்து கொண்டார்.

நூல் அறிமுக உரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.விஜயராஜா, நூல் விமர்சன உரையை கவிஞர் கு.கிலசன், நூல் ஆய்வரையினை கலைஞர் ஏ.ஓ.அனல் ஆகியோர் நிகழ்த்தினார்கள். 

இங்கு நூல் விமர்சன உரை நிகழ்த்திய கவிஞர் கு.கிலேசன் கூறுகையில்... 

சிறுகதை என்பது ஒரு சம்பவத்தையோ ஒரு கருத்தையோ தெளிவாக ஒருவர் சம்பந்தப்பட்டோ அல்லது ஒரு கூட்டத்துடன் தொடர்புபடுத்தியோ முழுமையாக் கூறுதலே அன்றி நாவலின் ஒரு பகுதியைத் தருதல் சிறுகதையல்ல. காற்றோடு போன கனவுகள் ஒரு காதல் ஊற்றாக மலர்ந்திருக்கிது வை.கே.ராஜூவை ஒரு சமூக மேம்படுத்தல்சார் விதைகளை விதைக்கின்ற கவிஞராக தெரியும் இன்று சிறுகதை பரிணாமத்திலும் இறங்குவது மகிழ்வு. விமர்சனம் என்பது நூலின் நிறைகளை மட்டும் சுட்டுவதல்ல நிறை குறைகளை ஆராய்ந்து தெளிவுபடுத்தி அடுத்த படைப்பை இன்னும் நிறைவாய் உருவாக்கத் துணை நிற்றலே என நான் கருதுகிறேன் அதே வேளை தன் படைப்பின் குறை நிறைகளை ஏற்று திருத்தங்களை உள்வாங்குதலே ஒரு எழுத்தாளனுக்கான பண்பும்கூட.. காற்றோடு போன கனவுகள் சிறுகதை நூலின் தலைப்பே எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமானதை உணர்த்துகிறதோ என எண்ணத் தோன்றுகிறது அதற்கு அடுத்ததாய் துணை வசனம் "நமக்கான பாதைகள் அடுத்தவர் பாதங்களில்லை" என தனித்துவத்தைக் காட்ட முயன்றிருப்பது எழுத்தாளரின் சிறந்த சிந்தனை எனலாம். 9 சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு 116 பக்கங்களை கொண்டிருக்கிறது. இதில் முதல் சிறுகதை "ஆறாத காயங்கள்" பிரத்தியேக வகுப்பில் மலர்ந்த காதலை வர்ணித்து அழகாய் நகர்கையில் காதலி ஓர் வாய் பேசமுடியாத ஊமை என்பதும் பரம ஏழை என்பதும் அறிகையில் காதலனின் மனம் கலங்குகிறதோ இல்லையோ வாசகர் மனங்கள் சற்றுத் தடுமாறிடும் அதேவேளை உயிர்கள் உடமைகளென ஆறாத காயங்கள் தந்த சுனாமியின் நினைவுகளை மீளநினைக்க வைக்கும் சிறுகதையின் தொடர்ச்சி கண்களில் ஈரம் தரலாம், இறுதியில் காதலியின் உயிர் கடற்கோளில் கரைவதைச் சொல்லும் சொல்லாடல் கலங்க வைக்கிறது நம்முள்ளும் ஆறாத காயங்களை விதைக்கிறது. சிறப்பான எளிய நடையை கையாண்டிருப்பதை வாழ்த்தியே ஆக வேண்டும். அடுத்து "இருட்டான இளமை" விடுதி வாழ்க்கையை யாவருக்கும் ஞாபகமூட்டிடும் அதேவேளை ஆணோ பெண்ணோ தான் சேர்கின்ற நண்பர்களின் நடத்தையால் தீயவழிகளிலும் செல்லலாம் எனும் கருத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர். பெண்கள் ஆணுக்கு சரிநிகராய் தாமும் செயற்பட எண்ணி மதுபோதையில் மூழ்கி தம்மையே இழப்பதையும் வாழ்வைத் தொலைப்பதையும் கருவைச் சுமத்தையும் உறவுகள் வெறுப்பதையும் வார்த்தைகளாய் அடுக்கியிருப்பது தற்கால உலகின் பிரதிபலிப்பென்றே சொல்லலாம். ஆயினும் தன் காத்திருப்புக்கு காரணமானவனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் அவன் விபத்திலே இறந்துபோனதுவும் அறியும் போது அவளின் மனநிலையை விபரிக்க மறந்துவிட்டாரோ எழுத்தாளர் என எண்ணத் தோன்றுகிறது அதைத்தவிர சிறுகதை நகரும் பாணி சிறப்பானது மூன்றாவது "உயிரைத் தேடிய பயணம்" தற்கால நிதர்சத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. முகப்புத்தகத்தில் கவிதையை ரசிக்க ஆரம்பித்து கவிஞனின் கவிதையாகவே மாறிப்போன ஒரு காதல் கதையை சொல்கிறது. காலங்கள் கடந்து தொடரும் காதலில் காதலன் நோய்வாய்ப்படுகையில் பாதி பிரிபவள் வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்ததும் நடுவீதியில் விட்டுச்செல்வதும் காதலன் சுகயீனம் ஓர்புறம் காதல்வலி ஓர்புறம் தாங்கித் தவிப்பதும் எழுத்தாளரின் வார்த்தைகளில் வடிந்த விதம் சிறப்பு பலபேரை சுயமதிப்பீடு செய்யத் தூண்டுமென நினைக்கிறேன் இச்சிறுகதை. நான்காவது சிறுகதை "ஏன் பிறந்தேன் ஏழைப் பெண்ணாக" வறுமையின் பிடியால் வயிறு நிரப்பிடப் பணிப்பெண்ணாய் கடல் தாண்டும் ஓர் பெண்ணின் கறுப்புப் பக்கங்களை கிறுக்கிய விதம் நிதர்சன வாழ்வின் வலிகளை கிளர்ந்தெளெச் செய்கிறது. பணி நிமிர்த்தம் அரபு தேசம் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் இச்சைகளையும் யுத்தத்தின் வடுக்களையும் கண்ணாடியாய் திருப்பிக்காட்டியிருக்கிறார் தன் எழுத்துக்களால்.. இது இவர் தொகுப்பின் அதிக வாசகர்களின் மனதைத் தொடும் சிறுகதையாக மாறுமென உறுதியளிக்கலாம். அடுத்து "கீறல் விழுந்த கண்ணாடி" சொல்லிக் கொள்ளாத காதலும் சோகத்தை விதைக்கும் முடிவுகளும் பல உண்மைக் கதைகளை ஞாபகமூட்டுகின்றது. தன்னைத்தான் காதலிக்கிறாள் என்பதை அறியாது அவள் அழகை சிதைத்து அடைய நினைக்கும் வஞ்சக எண்ணத்தையும் அசிட் வீசி அவள் முகத்தை மட்டுமல்ல உயிரையும் பறிக்கும் கல்நெஞ்சத்தையும் சுட்டுகிறது இவர் வரிகள். இறுதியில் இருவர் வாழ்வும் தொலைவதை காட்டியிருப்பது பலரை சிந்திக்க வைக்குமென நம்புகிறேன். அடுத்து "நானும் நிலாவும்" ஆண் ஒருத்தியை காதலிக்க அவனை இன்னொருத்தி காதலிக்க இருவரில் ஒருவரின் காதலை நிராகரிக்க நினைக்காது காலம் கடத்துகையில் இரண்டும் கைதவறிப் போகும் துயரைச் சொல்கிறது இக்கதை. தன்னைத் தேடி வந்த அன்பை ஏற்றிருக்கலாமோ என நாமே ஒரு தொடர்ச்சியை உருவாக்கும் விதமாய் நகர்ந்திருப்பதும் ஒரு தனித்துவமெனலாம். "வெள்ளைப் பூ" காதல் மலர்தல் இயற்கைதான் பழிவாங்கும் நோக்கில் வரும் காதலும் தீய நட்பும் நம் வாழ்வைத் தொலைக்கும் கருவிகளென கருத்துரைத்திருக்கிறார் எழுத்தாளர். ஒரு நிமிடம் சிந்திக்கத் தவறி சிறைவாழ்வில் உயிரைப் பிரியும் நிலையை உணர்ந்துகையில் ஒரு நிமிடம் சிந்திக்கத் தோன்றுகிறது. "விதியின் பயணம்" பேருந்துப் பயணத்தில் ஆரம்பித்த நட்பு காதலாய் மாறி விதியின் விளையாட்டில் சுகயீனமுற்றுக் காதலி இறக்க அவள் நினைவுகளை சுமந்து பயணிக்கும் சோகத்தின் வலிகளை வார்த்தைகளாக எழுத்தாளர் நகர்த்தியிருக்கின்ற விதம் வாசகர்களை ஏக்கத்துடன் இறுதிவரை வாசிக்கத் தூண்டுகிறது. இறுதிச் சிறுகதை "நினைவுகளோடு" காதலர்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது அவர்தம் மனநிலைகளையும் திருமணமான தன் முன்னாள் காதலியுடன் நட்பு வைத்தால்கூட அவள் வாழ்வு பாதிக்கப்பட்டுவிடுமோ என எண்ணி மீண்டும் தூரச்செல்லும் ஒரு நல்லுள்ளத்தை காட்டியிருக்கிறார் இச்சிறுகதையில். மொத்தத்தில் இத்தொகுப்பின் அத்தனை சிறுகதைகளும் காதல் எனும் கருப்பொருளைக் கொண்டிருந்தாலும் யாவும் சமூகக் கருத்துக்களையும் தற்கால நிதர்சன உண்மைகளையும் எடுத்துரைப்பதாகவே எண்ணுகிறேன். இது முதல் முயற்சி என்பதாலும் நாவிதன்வெளி பிரதேசத்தின் முதல் சிறுகதை தொகுப்பென்பதாலும் மனமுகந்து வாழ்த்துகிறேன் படைப்புக்கள் தொடர.