ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தராக கி.சோபிதா பதவியேற்பு


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய நிருவாக உத்தியோகத்தராக செல்வி. கிருஷ்ணபிள்ளை சோபிதா இன்று (23) காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கந்தையா லவநாதனின் முன்னிலையில் இன்று காலை சுபவேளையில் தனது பெற்றோரின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட்டுக் கடமையைப் பொறுப்பேற்றார்.

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதியுயர் தரத்துக்குப் பதவி உயர்வு வழங்கும் பொருட்டு கடந்த வருடம் (2018) மே மாதத்தில் தலைநகரில் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட தொகுதியினருக்கான பரீட்சையில் அதிகூடிய மொத்தப் புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக முதலிடத்தைப் பெற்ற இவர், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அமைச்சின் மேலதிக செயலாளரிடமிருந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – 9 கிராம சேவகர் பிரிவில் நிரந்தரமாக வசித்துவரும் கிருஷ்ணபிள்ளை – சிரோன்மணி தம்பதியினரின் மகளான இவர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைமாணி இளங்கலைப் பட்டதாரி என்பதுடன், அப்பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியிலும் சிறப்புச் சித்தி பெற்றவர். கணனி இயக்குனருக்கான சர்வதேச அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள இவர் கமு/திகோ/ இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயம் மற்றும் கமு/திகோ/ ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியுமாவார். கடந்த 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. (சா/த) பரீட்சையில் தான் தோற்றிய அனைத்து (10) பாடங்களிலும் அதிவிசேட (D) சித்தி பெற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியின் சாதனைப் பதிவுகளில் முதல் மாணவியாகத் தனது பெயரை நிலைநிறுத்தியவர். இவரைப் போலவே இவரது உடன் பிறந்த சகோதரரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவராவார்.

கடந்த 2005 ஆம் வருடம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் பொது முகாமைத்துவ உதவியாளராக நியமனம் பெற்றுத் தனது அரச சேவையை ஆரம்பித்த இவர், அங்கு நான்கு வருடங்கள் கடமையாற்றிய பின்னர் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதலும், பின்னர் 2016 ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலும் கடமையாற்றிவந்த நிலையிலேயே அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதியுயர் தரத்துக்குப் பதவி உயர்வு வழங்கும் பரீட்சையில் தோற்றி முதன்மைச் சித்தியடைந்திருந்தார். மும்மொழித் தேர்ச்சியுடைய இவர் தான் கடமையாற்றிய அரச அலுவலகங்களில் சிறந்த பணியாளர் என்ற பாராட்டையும் பெற்றவர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தராகக் கடமையேற்றுள்ள செல்வி. கிருஷ்ணபிள்ளை சோபிதா, எதிர்வரும் திங்கள் (26) முதல் தலைநகரிலுள்ள இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தில் இரண்டு வாரங்கள் இடம்பெறவுள்ள சேவை ஆரம்பப் பயிற்சியில் பங்குபற்றவுள்ளார்.

நிருவாக உத்தியோகத்தராகக் கடமைகளைப் பொறுப்பேற்ற இவருடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தமது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், நிகழ்வுக்கு வருகை தந்திருந்த உறவினர்களால் இவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.