(HNDA) கற்கைக்கான தரத்தை உறுதிப்படுத்தக்கோரி கோரிக்கை மகஜர் அனுப்பிவைப்பு



(ஆதிப் அஹமட்)

இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவகத்தினால்(SLIATE) நான்கு வருட காலப்பகுதியை கொண்ட வர்த்தகத்துறை பட்டத்துக்கு சமனானது என அங்கீகாரம் வழங்கப்பட்ட கற்கை நெறியாக வழங்கப்படுகின்ற உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா கற்கையினை பூர்த்தி செய்கின்றவர்களுக்கான அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்கின்ற போது தொடர் புறக்கணிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் இந்த விடயங்களை சுட்டிக்காட்டி இந்த கற்கை நெறிக்கான தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து கையெழுத்திட்ட கோரிக்கை மகஜர் ஒன்றினை நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களிடம் இந்த மகஜரினை மாணவர்கள் நேரடியாக நேற்றைய தினம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.