வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலுள்ள இலங்கை மாணவர்களுக்காக 800 கோடி ரூபா நிதி வெளிநாடுகளுக்கு செல்கிறது

அனைத்து பாடத் துறைகளும் அரச பல்கலைக்கழகங்களைப் போன்று தனியார் பல்கலைக்கழகங்களும் இருக்க வேண்டும் என்பது தனது கொள்கையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வியின் தரம் மற்றும் நியமங்கள் அதே போன்று தனியார் பல்கலைக்கழகங்களிலும் பேணப்படுவது கட்டாயமானதெனக் குறிப்பிட்டார்.


சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் நேற்று (20) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுவரும் இந்நாட்டின் மாணவர்களுக்காக அந்நியச் செலாவணியாக வருடம் ஒன்றுக்கு 800 கோடி ரூபா நிதி வெளிநாடுகளுக்கு செல்வதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கல்வித்துறையின் போட்டித்தன்மைக்கு தடையேற்படுத்த முடியாதென்றும் அந்த சவால்களை வெற்றிகொள்ளக் கூடிய வகையில் கல்வி முறைமை அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடந்த சில வருடங்களாக சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்திக் கொண்டபோதும் அம் மாணவர்களை பாதுகாத்து அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

நாட்டின் பிள்ளைகளை தனது பிள்ளைகளாக கருதுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பெற்றோர் தமது பிள்ளைகளை நேசிப்பதைப் போன்று ஆட்சியாளர்களும் நாட்டின் பிள்ளைகளை நேசிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

மருத்துவ மற்றும் பொறியியல் துறை மாணவர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்த ஜனாதிபதி, முதலாவது நியமனம் பெற்று குறைந்தது 10 வருடங்களாவது தனது தாய் நாட்டிற்காக சேவை செய்யுமாறு நாட்டின் முதற் பிரஜை என்ற வகையில் தான் அனைவரிடமும் திறந்த கோரிக்கையொன்றை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

முதலாவது நியமனம் கிடைக்கும் முன்னரே சில மருத்துவர்களும் பொறியியலாளர்களும் நாட்டை விட்டுச் செல்வது அனர்த்தமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு சவால் என்றும் நாட்டை நேசிப்பதைப் போன்று தான் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் உயர்கல்வியின் போது அம் மாணவர்களுக்கு அறிவூட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, சேர் ஜோன் கொத்தலாவல, பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.