பட்டிருப்பு கல்வி வலயத்தில் சுற்றாடல் சார்ந்த செயற்பாட்டு முகாம்.

(சித்தா)
குழந்தைப் பருவம் தொட்டு இயல்பாகவே மனிதன் தனது சுற்றுப்புறத்தின்மீது ஆர்வங்கொண்டு கிரமாமாக அச்சுற்றாடலுடன் வெற்றிகரமாக இடைத்தாக்கம் புரிவதற்கு அவசியமான தேர்ச்சிகளை அடைய முயற்சிக்கின்றான். இச் செயன்முறையின்போது தனது புலனுறுப்புகளைப் பயன்படுத்துவதோடு அவற்றின் உணர்திறன்களை வகைப்படுத்தல், தர்க்கித்தல், போன்ற அறிவுசார் திறன்களையும் விருத்தி செய்து கொள்கிறான். அவ்வாறே அவற்றின் ஊடாகத் தனது சொற்களஞ்சியத்தையும் தொடர்பாடல் திறனையும் விருத்தி செய்து கொள்கிறான். தான் வாழும் சுற்றாடல் தொடர்பான தகவல்களைக் கண்டறிதல்,சேகரித்தல், மீள வெளிப்படுத்தல், என்பன பிள்ளையின் வாழ்க்கைச் செயன்முறையின் ஓர் அங்கமாகும். இது இயல்பாகவே எந்தவோர் உயிரியிலும் நிகழ்வதொன்றாகும். பிள்ளையின் அப்போக்கை விருத்தி செய்வதே 'சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்' கட்டியெழுப்பும் அடிப்படையாகும்.
இந்த வகையிலே பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப்பற்றுக் கோட்டத்திற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாட்டு முகாம் மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் அவர்களினாலும், ஆரம்பப்பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களாலும் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த சுற்றாடல் சார்ந்த செயற்பாட்டு முகாமினை பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக நாடாவினை வெட்டித் திறந்து வைத்தார். இந் நிகழ்வில் போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ரி.அருள்ராசா, அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன் முகாம் சம்பந்தமான ஆலோசனைகளையும் பாராட்டுக்களையும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரிவித்தனர்.