த. தே. கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் ரணிலிடம் சரணாகதி அடைந்து விட்டார்கள்

தமிழ் மக்களின் ஆதரவை திரட்டுவதற்காகவே மீண்டும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்ஸ கூட்டணியும் சேர்ந்து தோற்கடித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறியிருந்தாலும் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது எவ்வித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் பொழுது 70 நிமிடங்கள் எழுந்து நின்று உரையாற்றிய ஆர்.சம்பந்தனின் கருத்துக்களை ஆட்சியிலுள்ள எந்தவொரு உறுப்பினராவது பொருட்படுத்தினார்களா என்பதனை மாவை சேனாதிராசா மறந்து விட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சரணாகதி அடைந்து விட்டார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது