காக்காச்சிவட்டை கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்



காக்காச்சிவட்டை கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும், பாராட்டு நிகழ்வும் (14.09.2019) காக்காச்சிவட்டை மாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவெட்டை மற்றும் பலாசோலை கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், இதுவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களாலும் குறித்த கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் மேற்படிக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறிப்பாக மீதமாகவுள்ள பாதைகளை செப்பனிடுதல் தொடர்பாகவும், யுத்தத்தால் சேதமடைந்துள்ள ஆலயங்களை புனரமைத்தல், சகல வசதிகளையும் கொண்டமைந்த விளையாட்டு மைதானமொன்றினை அமைத்தல், பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தல் எனப் பல விடயங்கள்  தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

அத்துடன் பலாச்சோலை உள்ளிட்ட கிராமங்களுக்கான மின் இணைப்பு, ஆலயப் புனரமைப்பு, வீதி அபிவிருத்தி எனப் பல பணிகளை மேற்கொண்டு தந்தமைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கும் கரையாக்கன்தீவு மாரியம்மன் ஆலய பரிபாலன  சபையினராலும் பொது மக்களாலும் கௌரவிப்பும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.

வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் த.தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.