முகமூடி அணிந்து வந்து எங்களை கடத்திச் செல்கின்ற கலாச்சாரம் இல்லாத ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டும்





மு.கோகிலன் 

மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பசார் பள்ளி வீதியில் உடற்பயிற்சி நிலையம் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமிரலியினால் திறந்து வைக்கப்பட்டது. 

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ஐ.ரி.அமிஸ்ரின்(அஸ்மி) தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் பிரகாஷ், கோறளைப்பற்று பிரதே சபைத் தவிசாளர் திருமதி.சோபாஜெயரஞ்சித் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

உடற் பயிற்சி நிலையம் திறப்பதில் பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் உடற் பருமனைக் குறைக்கவும் தொற்றா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் போதைப்பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை பாதுகாத்து கொள்ளும் முகமாக இவ் உடற் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் ஐ.ரி.அமிஸ்ரின் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமிரலி இவ்வாறு தெரிவித்தார். சிறுபாண்மை கட்சிகளின் குரல்வளையை முடக்குகின்ற தமிழ் முஸ்லீம் கட்சிகளை புறம் தள்ளிவிட்டு நாங்கள் நினைத்ததை சாதித்து கொள்ளமுடியும் என்கின்ற நிலவரத்திலே இந்நாட்டு தலைவர்கள் முந்தியடித்துக்கொள்வார்களாக இருந்தால் இந் நாட்டிற்குள் இருக்கின்ற சிறுபாண்மை கட்சித்தலைவர்கள் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்றும் அதனைத்தொடர்ந்து, 'தமிழர்களும் முஸ்லீம்களும் கடந்த காலத்தில் மைத்திரிபாலவை ஆதரித்ததில் காட்டிய ஆர்வம் அதை விடவும் பலமடங்கு ஆர்வத்தோடு வரவிருக்கின்ற தேர்தலில் காட்டினால் மாத்திரம்தான் நாங்கள் எதிர்பார்க்கின்ற ஒரு அரசியல் தலைமையை, நிம்மதியான வெள்ளை வேன் கலாசாரம் இல்லாத, ஆயுத கலாசாரம் இல்லாத, குண்டு கலாசாரம் முகமூடி அணிந்து வந்து எங்களை கடத்தி செல்கின்ற கலாசாரம் இல்லாத ஒரு தலைவரை நாங்கள் எடுக்க வேண்டிய தேவைப்பாட்டிற்குள் இருக்கின்றோம் என்பதுதான் வாஸ்தவம்.