அரச நிறுவனங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை

அரச நிறுவனங்களை நவீன தொழில்நுட்பத்திற்கு பொருத்தமான வகையில் அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவையாகும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் (அமைச்சரவை அந்தஸ்தற்ற) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான றுவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் எஸ்.எல்.பி.சி என்ற பெயரிலான கையடக்கத் தொலைபேசி செயலியை நேற்று அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலி மூலம் கூட்டுத்தாபனத்தின் அலைவரிசைகளை உலகம் பூராகவும் உள்ள மக்கள் செவிமடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 9 தசாப்தங்களாக இலங்கை வானொலி நாட்டிற்காக ஆற்றிய சேவைக்கு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.

கூட்டுத்தாபனத்தின் தலைவர் மாலக தல்வத்த உரையாற்றும் போது, வானொலி நேயர்களை மேலும் நெருக்கமாக்குவதற்கு இந்தச் செயலி துணைபுரியும் என குறிப்பிட்டார். சிறுவர்கள், இளைஞர்கள், மற்றும் தேசிய நோக்கங்களுக்காகச் செயற்படும் பொறுப்பு தேசிய வானொலிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நவீனமயப்படுத்தல் மூலம் புதிய வழிமுறையொன்றுக்கு பயணிக்க வேண்டியுள்ளதாகவும் மாற்றங்களுக்கு அச்சப்பட வேண்டியதில்லை என்றும் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

சவால்களுக்கு முகங்கொடுத்து புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலம் இந்த மாற்றங்களின் பயன்களை அடைந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கூகுள் பிளேஸ் ஸ்டொ மற்றும் அப்ஸ்டொவுக்குச் சென்று எஸ்.எல்.பி.சி செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தேசிய சேவை, சிற்றி எவ்.எம்.,வர்த்தக சேவை, தென்றல், ஆங்கில சேவை, மலையக சேவை உள்ளிட்ட பல அலைவரிசைகளை இதன் ஊடாக செவிமடுக்க முடியும்.