கிழக்கு மாகாணம் யுத்த அழிவுகளுக்குப் பின் தற்போதுதான் சுற்றுலாத் துறை தொழில் முயற்சியில் முன்னேறத் தொடங்கியுள்ளது

அலைச்சறுக்கலுக்கு தயாராகி வரும் அறுகம்பை பிரதேசம்

இலங்கையின் பொருளாதாரத்துக்கு வலுசேர்ப்பதாகவும், வருமானத்தை ஈட்டித் தரும் துறையாகவும் சுற்றுலாத்துறை காணப்படுகிறது.பொழுதுபோக்கு இடங்கள், உயிர்ப் பல்வகைமைகள், கலாசாரம், வரலாற்று இடங்கள் என்பன இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு வாய்ப்பான காரணங்களாகும்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சுற்றுலாத்துறை தொழில் முயற்சியில் ஈடுபடும் பல மட்டத்தினரும் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறுகம்பை பிரதேசம் சுற்றுலாத்துறையின் முக்கிய தளங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இங்குள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றின் உரிமையாளரான எஸ்.எம். அஸீஸ் இவ்வாறு கூறுகின்றார்:

“பயங்கரவாதத் தாக்குதலால் சுமார் 3 மாதங்கள் பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டோம். சிற்றுண்டிச் சாலையை வெறுமனே திறந்து மூடும் அளவுக்கு நிலைமை இருந்தது. என்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பாரிய கஷ்டத்தை எதிர்நோக்கினேன். கடந்த இரு வாரங்களாகத்தான் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஒரு முன்னேற்றம் தென்படுகிறது. இம்மாதம் நீர்ச் சறுக்கல் போட்டியிருப்பதால் நிறைய சுற்றுலாப் பிரயாணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். சுற்றுலாத்துறை பொலிசார் பாதுகாப்பு விடயத்தில் பூரண ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளை இயலுமான அளவு கவர்வதற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்

அறுகம்பை பிரதேசத்தில் 'வைபொயின்ட்' என்ற ஹோட்டலின் உரிமையாளரான ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஜோசப்போல் ஜாஓ இவ்வாறு கூறுகிறார்:

“கடந்த 08 மாதமாக இந்த ஹோட்டலை நடத்தி வருகின்றேன். அறுகம்பை பிதேசத்தில் நிறைய ஹோட்டல்கள் இருக்கின்றன.பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் ஹோட்டல் வருமானம் மிகவும் வீழ்ச்சியடைந்தது. அடுத்த வருடம் ஹோட்டல் வியாபாரத்தை நல்ல முறையில் கட்டியெழுப்ப முடியும் என்று நம்புகிறேன். அறுகம்பை பிதேசத்தில் ஓய்வு பருவ (off season) காலத்தில் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை மிகவும் குறைவாக காணப்படுகிறது. இப்பிரதேசத்தில் சுற்றுலாத்துறைக்கான புதிய இடங்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்".

சுற்றுலாத்துறையானது ஹோட்டல்களை மையமாகக் கொண்டது மட்டுமல்ல. அதனோடு தொடர்புடைய பல்வேறு துறைகளில் பலர்தொழில் முயற்சியில் ஈடுபட்டு தங்கி வாழ்கின்றனர். அவ்வாறான தொழில் முயற்சியாளர்தான் தங்கராசா ஜெகன். இவர் கைப்பணிப் பொருட்கள், உடை போன்றவற்றை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர். அவர் இவ்வாறு கூறுகிறார்:

“கடந்த வருடம் இதே மாதத்தில் வியாபாரம் மிகவும் உச்ச கட்டத்தில் இடம்பெற்ற மாதமாக இருந்தது. குண்டுவெடிப்பு சம்பவத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைவாகக் காணப்படுவதால் வியாபாரம் சாதாரணமாகத்தான் போகிறது. கடந்த வருடத்தில் ஒரு நாளைக்கு போன வியாபாரத்தில் பத்தில் ஒரு மடங்குதான் போகிறது. எதிர்வரும் மாதங்களில் நிலைமை சீராகி சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்கிறோம். ஏனென்றால் நாங்கள் அவர்களை நம்பித்தான் இந்த வியாபாரத்தை மேற்கொள்கிறோம்.”

பொத்துவில் அறுகம்பை பிரதேசம் கடல் மற்றும் தேசிய பூங்காக்கள் அமைந்த பிரதேசமாக காணப்படுவதால் சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இப்பிரதேசம் நீர்ச்சறுக்கலுக்கு பிரசித்தி பெற்ற இடமாகும். உலக நாடுகளிலிருந்து பல வீர, வீராங்கனைகள் இங்கு வந்து நீர்ச் சறுக்கல் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர். இவர்களுக்கான நீர்ச்சறுக்கல் வோட் (surf board) விற்பனை, திருத்துதல் மற்றும் வாடகைக்கு விடும் நிலையத்தில் பணிபுரிபவர் ஏ.எல்.எம். ஜௌபர். அவர் இவ்வாறு கூறுகிறார்:

“இம் முறை பாரிய வருமான இழப்பை எதிர்கொண்டுள்ளோம். எங்கள் கடைக்கு போட் வாங்குவதற்கோ, திருத்துவதற்கோ, வாடகைக்கு எடுப்பதற்கோ ஆட்கள் பெரிதாக வரவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் 80 வீதமான வருமானம் வீழ்ச்சியடைந்தது. அது மட்டுமல்ல அவசரகால சட்டத்தினால் அடிக்கடி படையினர் ஆயுதங்களுடன் சுற்றுலாப் பயணிகள் நிற்கும் இடங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர்கள் இங்கு தங்கியிருப்பதற்கு பயப்பட்டு திரும்பிச் சென்றார்கள். இனி இங்கு வருவதற்கும் தயங்குவார்கள். பாதுகாப்பு கட்டாயம் இருக்கத்தான் வேண்டும். அதற்கு சுற்றுலாப் பொலிஸாரைப் பயன்படுத்த வேண்டும். பாதுகாப்புத் தரப்பினரும் சில நடைமுறைகளைக் கையாண்டு முக்கிய இடங்களில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டால் நல்லது. நாட்டில் சுமுக நிலை தொடருமாக இருந்தால் எதிர்வரும் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.” இதேவேளை ஏ.எல்.எம். ஜௌபர் பணிபுரியும் நீர்ச்சறுக்கல் வோட் நிலையத்திற்கு அருகிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு உண்டு கொண்டிருந்தார் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி நீதே. அவர் இவ்வாறு தெரிவித்தார்:

“இலங்கை மிகவும் அழகான நாடு. இங்குள்ள மக்கள் எங்களை நன்றாக வரவேற்று உபசரிக்கின்றார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கைக்கு வருவதில் பயப்படத் தேவையில்லை. இங்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இலவச வீசா நடைமுறையை இலங்கை அரசாங்கம் வழங்யிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.”

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் 46 நாடுகளுக்கு இலவசமாக வருகை தரு வீஸாவை (on arrival) இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளமை உல்லாச பிரயாணிகளை அதிகரிப்பதற்கான முக்கிய திருப்புமுனையாகும்.

2018 இல் 23 லட்சம் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இதன் மூலம் 4.5 பில்லியன் வருமானம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் தாக்குதலின் காரணமாக இவ்வருடத்தில் உல்லாசப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக அறுகம்பை பிரதேசத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள், ஊழியர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டார்கள். அதேபோன்று சுற்றுலா பயணிகளை மையமாகக்கொண்டு தொழில்புரியும் நடைபாதை வியாபாரிகள், கைப்பணிப் பொருட்கள் விற்கும் வியாபாரிகள், ஆட்டோசாரதிகள், ஜீப் சவாரி நடத்துனர்கள் போன்றோர் வருமான இழப்பை எதிர்கொண்டு பொருளாதாரரீதியாக கஷ்டத்துக்கு உள்ளானார்கள்.

இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றம் இலங்கையில் சுற்றுலாத் துறை தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு வழிகாட்டும் அமைப்பாகும். இந்நிறுவனம் சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களது வருமானத்தை அதிகரிப்பதற்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு வழி காட்டுவதற்கும் அத்துறையில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்குமான நடுத்தர தரகர் நிறுவனமாக செயற்படுகின்றது. இந்நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் அறுகம்பை பிரதேச சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் வினவிய போது இவ்வாறு தெரிவித்தார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி அடைந்தது. இதனால் முப்படை, பொலிஸார் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பினால் இரண்டு மாதங்களுக்குள் இப்பிரதேசத்தின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டது.

அறுகம்பை பிரதேசத்தில் ஏப்ரல் தொடக்கம் நவம்பர் வரை சுற்றுலாத்துறைக்கான காலமாக இருக்கின்றது. சுற்றுலாத்துறையை இப்பிரதேசத்தில் மேம்படுத்துவதற்காக வீதி அபிவிருத்திகள், சுற்றுலா தகவல் மையம் போன்றவற்றை மேற்கொள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனவளத்துறை மற்றும் கிறிஸ்தவ கலாசார விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளார். இந்த செப்டம்பர் மாதம் உலகளாவிய நீர் சறுக்கல் போட்டி 25_-30 வரை அறுகம்பையில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் இக்காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும் என்றும் நம்புகின்றோம்".

கிழக்கு மாகாணம் யுத்த அழிவுகளுக்குப் பின் தற்போதுதான் சுற்றுலாத் துறை தொழில் முயற்சியில் முன்னேறத் தொடங்கியுள்ளது. ஆனால் அண்மைய கொடூர தாக்குதல் சம்பவம் நாட்டின் அனைத்து நடவடிக்கைகளிலும் பாரிய தாக்கத்தை செலுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக சுற்றுலாத்துறை முக்கிய பாதிப்புக்குள்ளாகியது.எனினும் தற்போது அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கையினால் நாட்டில் சுமுக நிலை ஏற்பட்டுள்ளதுடன் சுற்றுலாத் துறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.