மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கும் பெண்கள் அமைப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்



உள்ளுராட்சி மன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் அமைப்பினருக்கும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜான் சரவணபவ அவர்களுக்குமிடையில் கலந்தரையாடல் ஒன்று இன்று 11.09.2019 மட்டக்ளப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.


இணையம் தன்னார்வ அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பெண் உறுப்பினர்கள் இக் கலந்துரையாடலில் பங்குகொண்டிருந்ததுடன் சமுக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்புகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.

குறிப்பாக மாநகர சபையின் வரவு செலவுத்திட்டங்களை தயாரித்தல் மற்றும் சபைத் தீர்மானங்களை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் பெண் உறுப்பினர்களின் பங்களிப்புகள் போன்ற விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் முதல்வர் அவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பானதும், சுதந்திரமானதுமான நகரமாக மட்டக்களப்பு மாநகரினை மாற்றியமைக்கும் நோக்கோடு பெண்கள், சிறுவர் நேய மாநகரமான மாற்றியமைக்கும் செயற்பாடுகளின் முன்னேற்றநிலை தொடர்பிலும் மாநகர முதல்வர் சுட்டிக் காட்டியதோடு,

எதிர்காலத்தில் சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் பொது நலசிந்தனையோடு  மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பெண்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு அரசியலில் பொருத்தமான பொறுப்புகளை வழங்கும் பாரிய பொறுப்பினை ஏற்று அவர்களை வழிநடாத்த அனைத்து பெண்கள் அமைப்புகளும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.