உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை (fake news) முன்னெடுப்பவர்களை தண்டிப்பதற்கு கடுமையான சட்டம் கொண்டுவரப்படும்

தற்பொழுது சிலர் உண்மைக்கு பறம்பாக (fake news) பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். இவற்றுக்கு எதிரான தேவையான சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

இவ்வாறான உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை எல்லாம் அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகும். உண்மைக்கு புறம்பான விடயங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சமகால அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வழங்கியது.

ஆக கூடுதலான விமர்சனத்திற்கு உள்ளாகுவது ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் ஆவர். நாம் எதனையும் எதிர்கொள்ள தயாராகவே பணியாற்றுகின்றோம். நாம் இவ்வாறு செயற்படுவது நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பலாங்கொடை குமர வித்தியாலயத்தில் புதிய 2 மாடி வகுப்பறை கட்டிட தொகுதியை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.