பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு - வீடியோ

கிழக்கில் இற்றைக்கு 15 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அம்பாறை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில்  வெள்ளிக்கிழமை (11) மாலை பஞ்சபாண்டவர்கள் திரௌபதை, கிருஸ்ணர், தேவாதிகள் சகிதம் தீயில் இறங்குகின்ற தீமிதிப்பு வைபவம் நடைபெற்றது.
பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய உற்சவம் கடந்த 24 ஆம் திகதி திருக்தவு திறத்தல், ஊர்க்காவல்பண்ணல், கொடியேற்றம் ஆகியவற்றுடன் ஆரம்பமாகி நடைபெற்றவந்தது.  மகாபாரத இதிகாசத்தை மையமாகக்கொண்டு 18 தினங்கள் இவ் ஆலய உற்சவம் நடைபெற்றது.

இதற்கமைய பதினெட்டாம் நாளான வெள்ளிக்கிழமை மாலை தீப்பள்ளயத்தின் சிகரம் என வர்ணிக்கப்படும் தீமிதிப்பு வைபவம் நடைபெற்றது. பாண்டவர்கள் கடல்குளித்து மேனியெங்கும் மஞ்சள்பூசி ஆன்மாவானது ஒரே நிலையில் வைகுந்தம் செல்லும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் இத் தீமிதிப்பு வைபவம் பாண்டிருப்பில் நடைபெறுகின்றது. உலகில் மிக நீண்ட தீக்குழியைக்கொண்ட சிறப்புவாய்நத ஆலயமாக பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இங்குள்ள தீக்குழியானது 21 அடி நீளமும், 3ஆடி ஆழமும், 4அடி அகலமும் கொண்டதாகும். இந்தியாவில் இருந்து வருகைதந்த தான் மாமுனிவரால் அமையப்பெற்ற இவ் மகாசக்தி ஆலயத்தில் பண்டாரம் எனும் பிணிதீர்;க்கும் மஞ்சள் பொட்டு பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
நாட்டின் நாலாபாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகைதந்திருந்தனர்.  நேற்று   12 ஆம் திகதி சனிக்கிழமை  தருமருக்கு மூடிசூட்டும் வைபவம் நடைபெற்று  தீக்குழிக்கு பால்வார்க்கும் சடங்கு இரவு அம்மனின் ஊர்வலத்துடன் உற்சவம் இனிதே நிறைவுபெற்றது